சென்னை: சென்னையில் பள்ளி வேலை நேரங்களான காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரக்கூடாது என தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி கனரக வாகனங்கள் உள்ளே வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வாக்கின்ஸ் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் காலை மொபட்டில் தாயுடன் சிறுமி சவுமியா பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
சாலையில் உள்ள பள்ளத்தில் மொபட் இறங்கி ஏறிய போது நிலை தடுமாறி சிறுமி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சவுமியா மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி வேலை நேரங்களில் கனரக வாகனமான தண்ணீர் லாரி சென்னை உள்ளே வந்தது தான் சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து பள்ளி வேலை நேரத்தில் இயக்கப்பட்ட தண்ணீர் லாரியை தடுக்க தவறியதாக செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தும், புளியந்தோப்பு போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவக்கை எடுத்தும் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் எல்லையில் பள்ளி வேலை நேரமான காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை, அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தண்ணீர் லாரி உள்பட எந்தவித கனரக வாகனங்களும் உள்ளே வர அனுதிக்க கூடாது. இந்த கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் உள்ளே வருவதை போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அருண் போக்குவரத்து மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை 100 நாட்கள் வரை விடுவிக்க கூடாது என்று போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறையை சரியாக பின்பற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் போக்குவரத்து போலீசார் அவரவர் காவல் எல்லையில் உள்ள பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனரின் இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் எல்லையில் நேற்று பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.