செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2024-25ம் கல்வியாண்டிற்கான விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தினை செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் கலெக்டர் அருண்ராஜ் சீருடைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சமூக நலத்துறையின் மூலம் பள்ளிகளுக்கு நேரில் சென்று அளவெடுத்து, முதல் இணை சீருடைகள் தைத்து முடிக்கப்பட்டுள்ளன. தைத்து முடிக்கப்பட்டுள்ள இணை சீருடைகளை உரிய மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, இம்முறை தைக்கப்பட்ட சீருடைகள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று மகளிர் தையற் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் விநியோகம் செய்திட முடிவு செய்து, அதன் தொடக்கமாக வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த பணி தொடங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 952 பள்ளிகளில் பயிலும் 83,804 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படுகிறது. அதில் இப்பள்ளியில் மட்டும் 144 மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவர் திருமலை, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* நலத்திட்ட உதவி
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மக்கள்குறை தீர்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இயற்கை மரணம் அடைந்த 30 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.17,000/ விதம் மொத்தம் ரூ.5,10,000 மதிப்பீட்டிலான ஈமச்சடங்கு நிதி உதவியினை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழ், 11 பயனாளிகளுக்கு தலா ரூ.1,636/ வீதம் ரூ.17,996 மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரங்கள், 4 நபர்களுக்கு ரூ.2,780 வீதம் ரூ.11,120 மதிப்பீட்டிலான காதொலி கருவிகள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வின், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜோதிசங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர் வேலாயுதம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.