மரக்காணம்: ஒரே வீட்டில் மாணவி மற்றும் அவரது அத்தை ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (25) மீனவர். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேணி மீனவர் கிராமத்தில் வசிக்கும் விஜய்யின் அக்கா மகள் கீர்த்திகா (15).
இவர் தாய்மாமனான விஜய் வீட்டில் தங்கி பனிச்சமேடு அருகில் உள்ள அனுமந்தை ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய், அவரது மனைவி ஸ்ரீமதி, அக்கா மகள் கீர்த்திகா ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கீர்த்திகா மேல் மாடியில் தூங்க சென்றுள்ளார். விஜய் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மாடியை விட்டு கீர்த்திகா வெளியில் வராததால் விஜய்யின் மனைவி ஸ்ரீமதி மேல் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கீர்த்திகா அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீமதி, அவரும் கீழ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. தற்கொலைக்கு குடும்ப பிரச்னையா? வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.