சத்ரபதி சம்பாஜிநகர்: பள்ளி மதிய உணவு திட்டத்தில் சர்க்கரை உணவுகளை வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி மகாராஷ்டிரா அரசுக்கு குழந்தைகள் நல மருத்துவர்கள் குழு கடிதம் எழுதி உள்ளது. மகாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தீபக் கேசர்கருக்கு மஹா அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் மதிய உணவு திட்டமான பிரதான் மந்திரி போஷான் சக்தி நிர்மான் யோஜனாவின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வாரத்தில் 4 முறை அரிசி புட்டு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 25 கிராம் சர்க்கரையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 45 கிராம் சர்க்கரையும் வழங்க மாநில அரசு தீர்மானித்துள்ளது.
நமது உடலுக்கு ஒருநாளைக்கு 25 கிராம் சர்க்கரை மட்டுமே தேவை. சர்க்கரையில் 2 வகைகள் உள்ளன. ஒன்று சர்க்கரை சேர்க்கப்படும் உணவுகள், மற்றொன்று உணவு வகைகளில் இயற்கையாகவே இருக்கக் கூடிய சர்க்கரை. பள்ளி குழந்தைகள் நாள் முழுவதும் மற்ற உணவுகளையும் சாப்பிடுவதால் அவர்கள் அதிகமான சர்க்கரை உட்கொள்ளுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை ஏற்படும். எனவே இதுபோன்ற சர்க்கரை உணவுகளை வழங்குவதை நிறுத்துமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.