பெரம்பூர்: கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி, எம்கேபி நகரில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, நேற்று காலை முல்லை நகர் வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது போதையில் அவ்வழியாக வந்த ஒருவர், சிறுமியை வழிமறித்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சுந்தர் (35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த இன்பசேகரன் (52), நேற்று காலை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி மார்க்கெட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த மாநகராட்சி குப்பை லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து வந்த அண்ணாநகர் போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.