திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள மான்னார் என்ற பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் விஜய். பிரபல யுடியூபரான இவரை இன்ஸ்டாகிராமிலும் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கோவிந்த் விஜய்க்கு கொச்சியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்தது. அப்போது கோவிந்த் விஜய், அந்த மாணவியை திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பிய மாணவியை, கோவிந்த விஜய் நேரில் வரவழைத்து பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அந்த மாணவியுடனான தொடர்பை கோவிந்த் விஜய் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் கொச்சி களமசேரி போலீசில் புகார் அளித்தார். கோவிந்த் விஜய் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கோவிந்த் விஜய்யை நேற்று கைது செய்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.