திருவள்ளூர்: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடக்கிறது. 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் என வழங்கப்பட உள்ளன. 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9ம் தேதி காலை 9 மணியளவில் திருவள்ளூர், தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேனிலைப் பள்ளியில் போட்டி நடக்கிறது. ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவன் வீதம் 3 பேரை தேர்வு செய்து தலைமையாசிரியர்கள் அனுப்பவேண்டும். கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வரும் 10ம் தேதி காலை 9 மணியளவில் திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கான போட்டிக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வரே ஒரு போட்டிக்கு ஒருவர் என கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு 3 பேரை தேர்வு செய்து அனுப்பவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.