இந்தியாவில் 2011-2021க்கு இடைப்பட்ட காலத்தில் 17 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்குத் தமிழக அரசு எடுத்த தொடர்முயற்சிகளே காரணம்.இந்தியாவில் 2030ஆம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னெடுப்பில் தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் எய்ட்ஸ் பரவல் 0.21 சதவீதம்,தமிழகத்தில் 0.18 சதவீதம். எனவே, தமிழகத்தில் எய்ட்ஸ் பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. முதன்முதலில் எய்ட்ஸ் எனும் கொடிய நோய் 1986ஆம் ஆண்டு தமிழகத்தில் சென்னையில்தான் கண்டறியப்பட்டது. எனவே, முற்றிலுமாக இந்த உயிர்க்கொல்லி நோயை வேரோடு அழிக்க இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள்/கல்லூரிகளில் ரெட் ரிப்பன் கிளப் எனும் மாணவர் குழுக்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக விழிப்புணர்வுப் பணியாற்றி வருகிறது.ரெட் ரிப்பன் கிளப் என்பது இந்திய அரசினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். இதன் மூலம் மாணவர்கள் எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவார்கள். வழக்கமான தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை வளர்ப்பதற்கும், அனைத்து எளியோருக்கும் ரத்ததானம் செய்வதற்கும், தங்களால் இயன்ற உதவியை வழங்குவதற்கு அனைத்து மாணவர்களிடையேயும் தொண்டு மனப்பான்மையை ஏற்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது.
ரெட் ரிப்பன் கிளப் உருவாக்கப்பட்டதன் காரணம்
1980களில் அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயால் ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்துகொண்டிருந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த நாடகக் கலைஞர் பேட்ரிக் ஓ டேனால் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது சக கலைஞர்களுடன் 1988ல் விஷுவல் எய்ட்ஸ் என்கின்ற அமைப்பை ஏற்படுத்தி அரங்க நாடகங்களை நடத்தினார். இருந்தபோதிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 1991ல் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மார்க் ஹேப்பல் என்பவர் விஷுவல் எய்ட்ஸ் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்று பொதுவான ஒரு இலச்சினையை(சின்னம்) உருவாக்கினார். அதன்படி ரெட் ரிப்பன் உருவானது.1992ஐ நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ரிப்பனுக்கான ஆண்டாக அறிவித்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தேசிய எய்ட்ஸ் கொள்கையை வரையறுத்தார். மிகப்பெரிய எய்ட்ஸ் நோயை வெல்ல ரெட் ரிப்பன் மிகப்பெரிய ஆயுதமாக மாறியது.ரெட் ரிப்பன் என்கின்ற சிவப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம், இது ரத்தத்தின் நிறத்தை குறிக்கிறது. ரத்தம் மூலம் இந்த நோய் பரவும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. மற்றுமொரு காரணம் சிவப்பு நிறம் அன்பைக் குறிக்கும். எய்ட்ஸ் நோயாளிகளிடம் சக மனிதராக அன்பு பாராட்ட வேண்டும் அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்பதற்காகவும், சிவப்பு ரிப்பன் என்பது எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான சர்வதேச சின்னமாகும்.
தமிழகத்தில் ரெட் ரிப்பன் கிளப்
இது இளைஞர்களிடையே ஆபத்து உணர்வை ஏற்படுத்தி விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் எச்ஐவி-யைத் தடுப்பதற்கும் இலக்காக உள்ளது. ரெட் ரிப்பன் கிளப் இளைஞர்களைச் சென்றடைவதற்கான சக்தி வாய்ந்த ஊடகமாக மாறி உள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் (TNSACS) தலைமை தாங்கி நடத்தி வரும் இந்தத் திட்டம், உயர்கல்வித் துறையால் ஆதரிக்கப்பட்டு எச்ஐவி/எய்ட்ஸ் பிரச்னைகளைத் தீர்ப்பதில் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது.ரெட் ரிப்பன் கிளப் 15 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு எச்ஐவி/எய்ட்ஸ்-ல் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான தகவல் மற்றும் வாழ்க்கைத் திறன்களை (LIFE SKILLS) வழங்குவதன் மூலமும் அவர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர்களை சக கல்வியாளர்களாக மாற்றுவதன் மூலமும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
ரெட் ரிப்பன் கிளப்பின் குறிக்கோள்கள்
இளைஞர்களிடையே ஒழுக்கத்தின் அவசியத்தை உணர்த்தி நடத்தை மாற்றத்தை உண்டாக்கி எச்ஐவி தொற்றைக் குறைப்பது மற்றும் ஆபத்து உணர்வை உயர்த்துதல் முக்கிய குறிக்கோள் ஆகும். எச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் இளைஞர்களுடைய ஊக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு எதிரான நோக்கம் மற்றும் பாகுபாட்டைக் குறைப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்த இளைஞர்களை ஊக்குவித்தல், தலைமைத்துவம், பேச்சுவார்த்தை மற்றும் குழு உருவாக்கம் ஆகியவற்றில் அவர்களின் திறன்களை மேம்படுத்தி சக கல்வியாளராக ஆக்குவது. இளைஞர்களையே ஊதியம் பெறாத ரத்த தான தன்னார்வலராக ஆக்குவது போன்றவையே ரெட் ரிப்பன் கிளப்பின் குறிக்கோள்கள் ஆகும்.
செயல்பாடுகள்
ரெட் ரிப்பன் கிளப் இளம் உள்ளங்களில் நடத்தை மாற்றத்தைக்கொண்டு வரும் நோக்கத்துடன், பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகிறது. பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் ரெட் ரிப்பன் கிளப் தன்னார்வலர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு ‘வாழ்க்கையைக் கொண்டாடுதல்’ என்கிற பத்து மணி நேரப் பாடத்திட்டம் வழங்குதல், ரெட் ரிப்பன் கிளப் தன்னார்வலர்களுக்கு சக கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் /இயக்குநரக அளவிலான பேச்சு,ஓவியம்,வினாடி வினா மற்றும் பல போட்டிகள் நடத்துதல், சர்வதேச இளைஞர் தினம், உலக எய்ட்ஸ் தினம், தேசிய இளைஞர் தினம், சர்வதேச தன்னார்வலர்கள் தினம், உலக ரத்ததான தினம் போன்ற நிகழ்வுகளின்போது எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் (பேரணிகள் மற்றும் அவுட்ரீச் நடவடிக்கைகள்) மேற்கொள்ளச் செய்வது.
வாழ்க்கைத்திறன் கல்வித் திட்டம்
(LIFE SKILLS EDUCATION PROGRAM- LSEP)
எச்ஐவி/எய்ட்ஸ் பரவுதல் மற்றும் தடுப்பு பற்றிய தகவலை வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் (TNSACS) இணைந்து பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் பள்ளிகளில் வாழ்க்கைத்திறன் கல்வித் திட்டம் (LSEP) நடத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன்களை வழங்குவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
LSEP-யின் நோக்கங்கள்
இளம் தலைமுறையினர் தங்களைப் பற்றி, அவர்களின் இளமைப் பருவம் மற்றும் அவர்களின் பாலுணர்வு, எச்ஐவி மற்றும் பிற பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் பற்றிய அடிப்படை உண்மைகளை கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். இளைஞர்கள் போதைப் பொருள் துஷ்பிரயோகத்தில் உள்ள அபாயங்களைப் புரிந்து கொள்வது, தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும் வாழ்க்கைத்திறன்களை வளர்த்து வலுப்படுத்திக் கொள்ளவும், எய்ட்ஸ் பற்றிய கட்டுக்கதைகளை அகற்றி தவறான எண்ணங்களைத் தெளிவுபடுத்துதல், எச்ஐவி தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவக்கூடிய வழிமுறைகளைக் கண்டறிதல் மற்றும் எச்ஐவி- யுடன் வாழும் மக்களிடம் நேர்மறையான அணுகுமுறையை ஊக்குவிக்கும் விதமாகத் தயார்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் 8,9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் உள்ள இளம்பருவத்தினருக்குத் துல்லியமான, வயதிற்கு ஏற்ற வாழ்க்கைத்திறன் அடிப்படையில் ஒவ்வொரு இளம்பருவத்தினருக்கும் விழிப்புணர்வு வழங்குதல், பள்ளி பாடத் திட்டத்திலும் ஆசிரியர் கல்வி படிப்பு நடைபெறும் நிறுவனங்களிலும் இளமைப் பருவக் கல்விக் கூறுகளைத் திறம்பட ஒருங்கிணைத்தல் போன்றவையே LSEPயின் நோக்கங்களாகும்.
LSEP-யின் செயல்பாடுகள்
இளம்பருவ மாணவர்களின் மனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் வாழ்க்கைத்திறன் கல்வித் திட்டம் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகிறது. வாழ்க்கைத்திறன் கல்விப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு 16 மணி நேரம் அமர்வு, பள்ளி வட்டார மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முக்கியமான நிகழ்வுகளின் போது எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் (பேரணி மற்றும் அவுட்ரீச் செயல்பாடுகள்) மேற்கொள்ளச் செய்வது போன்றவை LSEPயின் செயல்பாடுகளாகும். மொத்தத்தில் எய்ட்ஸ் நோயை எதிர்த்துப் போராட ஒரே வழி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். எய்ட்ஸ் ஒரு நோயாக இருப்பினும் அதைக் குணப்படுத்தவோ, சமுதாயத்தில் இருந்து ஒழிக்கவோ இயலவில்லை. எனவே, அதற்கு ஒரே தீர்வாக, எய்ட்ஸை தடுப்பதும், ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதுதான். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி எய்ட்ஸ் இல்லா உலகம் படைப்போம்.