வேளச்சேரி: பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் நேற்றிரவு வாகனத்தின் மீது, ஐடி ஊழியர்களை ஏற்றி வந்த கார் மோதி தீப்பிடித்தது. இதில், பெண் ஊழியர் காயமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் (24).
இவர் தனக்கு சொந்தமான காரை, கூடுவாஞ்சேரி அருகே வெள்ளாஞ்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியர்களை ஏற்றி செல்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் ஐடி நிறுவனத்தில் இருந்து பள்ளிக்கரணையை சேர்ந்தவர்களை காரில் ஏற்றி கொண்டு வந்தார். 10 மணியளவில் பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்றபோது பெரிய கோவிலம்பாக்கம் அருகே முன்னால் சென்ற வாகனத்தின்மீது மோதியது.
இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே காரை சாலையோரமாக நிறுத்தினார். அனைவரும் அலறியடித்து கீழே இறங்கினர். இதில், காரில் இருந்த பள்ளிக்கரணையை சேர்ந்த சினேகாவுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவலறிந்து பள்ளிக்கரணை ரோந்து எஸ்ஐ மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவ்வழியே சென்ற தண்ணீர் லாரிகளை நிறுத்தி அதன் மூலம் தீயை அணைத்தனர். புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.