மும்பை: கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் நர்சரி பள்ளியில் படிக்கும் 3 மற்றும் 4 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் பத்லாபூரில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் அக்ஷய் ஷிண்டே கழிப்பறைக்கு வந்த 4 வயது பிரீ கே.ஜி 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது பற்றி பெற்றோரும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரும் பத்லாப்பூர் கிழக்கு போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். அக்ஷய் ஷிண்டேவை கைது செய்து போலீஸ் விசாரணை துவங்கியதும் பள்ளி முதல்வர், ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் ஆகியோரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.இந்நிலையில் சிறுமிகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை 8.30 மணியளவில் பத்லாபூர் ரயில் நிலையத்தில் கூடினர்.
தண்டவாளத்தில் குவிந்த அவர்கள், ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற போலீசார் மீது, தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். இந்த போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது. பிடிபட்ட குற்றவாளி மீது பலாத்கார முயற்சி வழக்கு பதிவு செய்யுமாறும், விரைவாக விசாரணை நடத்தவும் முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.