கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் மற்றும் ஜாதிச்சான்றிதழ் விவரங்களைப் பதிவு செய்யுமாறு, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் சார்பில், பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்குத் தகுதியான மாணவர்கள், தங்களின் ஜாதிச் சான்றிதழைப் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப வருமானச் சான்றிதழும் வாங்கி வர வேண்டும். கல்வி உதவித்தொகையானது வரும் காலத்தில், மாணவரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். அதனால், மாணவரின் வங்கிக் கணக்கில், பெற்றோரின் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தகவல்களை மாணவர்களுக்குத் தெரிவித்து, உரிய சான்றிதழ்களை மாணவர்களிடம் பெற்று, நவம்பர்15ம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் பள்ளிகளை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 31.10.2023 அன்று காலை 10.00 மணியளவில் Online இல் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் மாறுதல் கோரி பதிவு செய்த மேற்கண்ட பதவிகளுக்கு மட்டும் ஆதிதிராவிடர் நல இயக்குநரின் நேரடி பார்வையில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முன்னிலையில் நடைபெற உள்ளது.