*ஆத்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
ஆறுமுகநேரி : பெண்கள், சிறு குறு நிலமற்ற விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பின் மூலம் பயன்பெற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆத்தூரில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முகாமைதுவக்கிவைத்துபேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறப்பு முகாம் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நேற்று நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த இம்முகாமில் மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு, கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகள் மற்றும் கன்றுகளுக்கான பரிசுகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் ‘‘கால்நடைகளை வளர்க்கும் குடும்பங்களுக்கு ஏடிஎம் மிஷின்களை போல கால்நடைகள் நடமாடும் செல்வங்களாக பயன்படுகிறது கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் நோயற்ற கால்நடைகளை உருவாக்குவது, உள்ளூர்இன பசுக்கள் மற்றும் எருமைமாடுகளின் தரத்தையும் எண்ணிக்கையை உயர்த்துவது, பசுந்தீவன உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்துவது, உள்ளூர் கால்நடைகளின் வாழ்விடங்களை பாதுகாத்து எண்ணிக்கையை பெருக்குவது, கால்நடைகளை வளர்ப்போருக்கு முக்கிய விழிப்புணர்வு பயிற்சிகளை ஆலோசனைகளை வழங்கி உற்பத்தியை மேம்படுத்துவது ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும் மானாவாரி நிலங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பசுந்தீவனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது, பசுந்தீவனங்களை ஊடுபயிராக பயிரிட்டு பராமரிப்பதற்கான செலவுகளை வழங்குவது என கால்நடை பராமரிப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நோயில்லாத கால்நடைகளை உருவாக்குவது மற்றும் உள்ளூர் இன கால்நடைகளின் எண்ணிக்கையை பெருக்குவது மற்றும் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தியை பெருக்கி சேமித்து அந்த சினை ஊசியை குறைந்த விலையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்குவது என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த வழி வகுக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை காக்கும் வகையில் கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டிருப்பதோடு நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் ஒரு ஒன்றியத்திற்கு 12 இடங்களில் நடத்தப்படுகிறது. நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவித்து அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் ஓசூர், சிவகங்கை, திருநெல்வேலி கால்நடை பண்ணைகளில் நாட்டுக்கோழி குஞ்சுகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் 38,700 விவசாயிகளுக்கு தலா 40 நான்குவார வயதுள்ள நாட்டுக்கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கால்நடைகளை பண்ணைகள் மூலம் வளர்த்து பெருமளவு பொருளாதாரப் பயனடையும் வகையில் 50 சதவீத மானியத்தில் ரூ. ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற்று தரப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை கால்நடை மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பெண்கள், சிறுகுறு நிலமற்ற விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பின் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகமும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது’’ என்றார்.
நிகழ்ச்சியின்போது 7 பயனாளிகளுக்கு ரூ. 60 ஆயிரம் கால்நடை கொள்முதல் கடன் வழங்கப்பட்டது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 201 பேருக்கு தலா ரூ. 60 ஆயிரம் கால்நடை கொள்முதல் கடன் வழங்கப்பட்டுள்ளது.
முகாமில் நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்லப்பாண்டியன், ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார், சென்னை கால்நடை பராமரிப்புத்துறை தலைமை அலுவலக அதிகாரி பாஸ்கர், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், திமுக வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் பில்லா எஸ்ஜெ ஜெகன், ஒன்றியச்செயலாளர்கள் சதீஷ்குமார்,
செங்குழி ரமேஷ், நவீன்குமார், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மாணிக்கவாசகம், கோபி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் லிங்கராஜ், ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து, துணைச்செயலாளர்கள் பக்கீர் முகைதீன், ஜெயக்கொடி, விவசாய அணி அமைப்பாளர் அரவிந்தன், மாவட்ட பிரதிநிதி கலையரசு, தலைமைக்கழக பேச்சாளர் பாலசுப்பிரமணியன், இளைஞரணி நிர்வாகிகள் ராம்குமார், சிவபெருமாள், விமல், ராஜேஷ், முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள் ரகுராமன், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். துணை இயக்குநர் ஆண்டனி இக்னேசியஸ் சுரேஷ் நன்றி கூறினார்.