சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இந்த பதவி உயர்வை வழங்கினாலே பெரும்பாலான காலியிடங்கள் குறைந்துவிடும். அதனால் இந்த பணிநிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்திய பின்னர் பணிநிரவலை மேற்கொள்ள முன்வர வேண்டும். பணிநிரவலுக்கு முன்பாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணிநிரவலில் கூடுதல் பணியிடங்களை மட்டுமே காண்பிக்க வேண்டும். அதேபோல், உபரி ஆசிரியர்களை பணிநிரவலில் வேறு பள்ளிக்கு செல்வதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.