திருமலை: திருப்பதியில் சுவாமியை தரிசிக்கும் பக்தர்கள் லட்டு வாங்க இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம். தரிசன டிக்கெட்டை கியூஆர் கோடு ஸ்கேன் செய்து நேரடியாக லட்டு பெறும் வசதியை தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் தரிசனம் செய்யும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தேவையென்றால் வரிசையில் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி லட்டு டிக்கெட்டுகளுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்க தேவஸ்தானம் புதிய முறையை செயல்படுத்த உள்ளது. அதில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் டிஜிட்டல் முறையில் லட்டு பெறலாம்.
இதற்காக தொழில்நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டல் லட்டு கொள்முதல் முறையைத் தொடங்க உள்ளது. இந்த புதிய முறையில், பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண்ணை அதற்கென வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான லட்டுகளின் எண்ணிக்கையை தேர்ந்தெடுத்து, யூ.பி.ஐ. அல்லது பிற டிஜிட்டல் பணம் செலுத்தி லட்டுக்கான டிக்கெட்டை பெறலாம். மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம் 2 லட்டுகளை வாங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில், இந்த வரம்பை 4 லட்டுகளாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கியின் கீழ் லட்டு கவுன்டரில் 5 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.பி.சி. விசாரணை மையத்தில் மேலும் 3 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் சி.ஆர்.ஓ. அலுவலகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகைகளிலும் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. விரைவில், விஐபி தரிசன டிக்கெட்டுகளை இதே இயந்திரம் மூலமாக பெறும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.4.72 கோடி காணிக்கை;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 84,179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,036 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.72 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இன்று காலை வைகுண்டம் காம்பளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியதால் வெளியே பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 18 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்வார்கள். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.