நெல்லை: மோசடி பேர்வழிகளின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையால் நெல்லையில் உள்ள வியாபாரிகள் அடிக்கடி ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மோசடி வலையில் சிக்காமல் இருக்க வியாபாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஜிபே, போன்பே என செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையானது அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கவும், அரசு பஸ்சில் பயணச்சீட்டு எடுக்கவும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நகர்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், விவரமறியாதவர்களை மோசடி பேர்வழிகள் எளிதாக பணம் செலுத்திவிட்டதாகக் கூறி மோசடி செய்யும் போக்கும் நெல்லையில் அதிகரித்து வருகிறது. நெல்லை முக்கூடல் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை, இறைச்சிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட 5 கடைகளில் சமீபத்தில் 4 பேர் கொண்ட கும்பல் பொருட்களை வாங்கிவிட்டு ஆன்லைனில் பணத்தை செலுத்திவிட்டதாகக் கூறி நழுவி உள்ளனர். ஆனால், கடை உரிமையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது, எந்தவொரு பணமும் வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், முக்கூடல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நாங்குநேரியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (19), பாப்பாக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி (28) மற்றும் பாப்பாக்குடி தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தைப் போல் பாப்பாக்குடி, அம்பை, முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மோசடி முயற்சிகளில் ஈடுபட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இவர்கள் மோசடி செய்ய முயன்று உள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்களை போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், வியாபாரிகள் உஷாராக இருந்ததால், இந்தக் கும்பல் பிடிபட்டு, உரிய பணத்தை செலுத்திவிட்டு சென்றதாகக் போலீசார் கூறினர். ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யப்படும்போது, வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே பொருட்களை வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சிறு வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கவனக்குறைவுடன் செயல்படும் நிலை உள்ளது.
இதனால் கடைகளில் உயர்தர கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சந்தேகத்திற்குரிய நபர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் எனவும், வியாபாரிகள் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். வியாபாரிகள் ஜிபே, போன்பே போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் பரிவர்த்தனை விவரங்களை உடனடியாக சரிபார்க்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், மர்ம நபர்களின் நடவடிக்கைகளை உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். முக்கூடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த இந்த மோசடி சம்பவங்கள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோசடி பேர்வழிகளால் அச்சம்
ஏமாற்று பேர்வழிகளின் அட்டூழியங்களால் அப்பாவி மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அனைத்து துறைகளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறிய நிலையில் நெல்லையில் உள்ள சில பெட்ரோல் பங்க் டீலர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளனர். இதனால் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை நம்பியுள்ள பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. பங்க் டீலர்களில் சிலர் மோசடி பேர்வழிகளுக்கு பயந்து ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு கணக்கை ஒப்படைக்க வழியுறுத்தப்படும் நிலையும் நெல்லையில் நிலவி வருகிறது.