புதுடெல்லி: லேட்டரல் என்டரி மூலம் அரசு உயர் பதவிகளுக்கு ஆட்தேர்வு நடத்துவதாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பானது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிப்பதாக என ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 45 இணை செயலாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கொண்டு லேட்டரல் என்டரி(நேரடி சேர்க்கை) முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது.
பொதுவாக, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடிய இப்பணியிடங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குரூப் ஏ அதிகாரிகளை கொண்டு நிரப்பபடும். ஆனால் லேட்டரல் என்டரி முறையில் இத்தகைய உயர் பணியிடங்களை தனியார் துறையினர் மூலம் நிரப்ப எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும்,இந்த நேரடி பணி சேர்க்கை முறையில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாதது எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் உரிமையை பறிக்கும் செயலாகும் என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘யுபிஎஸ்சியில் வழக்கமான ஆட்தேர்வு நடைமுறையை தவிர்த்து, மோடி அரசு அரசியலமைப்பை தரம் தாழ்த்தி உள்ளது. இத்தகைய செயல்முறை மூலம் தங்களுக்கு சாதமான ஆர்எஸ்எஸ் நபர்களுக்கு உயர் பதவிகளில் அமர வைக்க பாஜ முயற்சிக்கிறது. மேலும், இத்தகைய முக்கிய பதவிகளில் பின்வாசல் வழியாக ஆட்தேர்வு நடத்துவதன் மூலம், எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்படுகிறது.
ஏற்கனவே அரசு உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இந்த புதிய கொள்கை அவர்களை மேலும் ஒதுக்கி வைக்கச் செய்யும். அதோடு, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் திறமையான இளைஞர்களின் வாய்ப்புகளையும் இது பறிக்கும் செயல்’’ என கவலை தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அரசு உயர் பதவிகளில் தனது சித்தாந்த கூட்டாளிகளை நியமிக்கும் பாஜவின் சதியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்த நடைமுறை மூலம் சாமானிய மக்கள் வெறும் கிளார்க், பியூன்களாக மட்டுமே இருக்க முடியும். அதோடு இது தலித், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடு உரிமையை பறிக்கும் தந்திரமும் கூட. இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெறாவிட்டால், அக்டோபர் 2ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ‘‘எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் இடஒதுக்கீட்டை பறிக்கும் இந்த நடைமுறை அரசியலமைப்பின் மீதான அப்பட்டமான விதிமீறல். எந்த விதிமுறையும் வகுக்காமல் உயர் பதவிகளில் நேரடியான ஆட்தேர்வு சட்டவிரோதமானது’’ என்றார்.
திமுக எம்பி பி.வில்சன் தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘‘ஆட்சேர்ப்பு செயல்முறையில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற அரசியல் சாசன உத்தரவை யு.பி.எஸ்.சி., எப்படி புறக்கணித்துள்ளது என்பதற்கு யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள விளம்பரம் ஒரு சிறந்த உதாரணமாகும். பதவிகளுக்கான எந்த இட ஒதுக்கீடும் வழங்காமல், 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர்/துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடும்போது, மொத்தமுள்ள 45 இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் / துணை செயலாளர் பதவிகளில் குறைந்தது 22-23 விண்ணப்பதாரர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் இல்லையா?. பிரதமர், நீங்கள் இந்த சட்டவிரோதமான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடரப் போகிறீர்களா அல்லது அரசியல் சட்ட இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தி புதிய நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா? இவ்வாறு வில்சன் தனது பதிவில் கூறியுள்ளார்.
* 2017ஒன்றிய அரசு உயர் பணியிடங்களில் தனியார் துறையை சேர்ந்தவர்களை நேரடியாக நியமிக்க நிதி ஆயோக், ஒன்றிய அரசு செயலாளர்கள் குழு பரிந்துரை
* 2018நேரடி பணி சேர்க்கை திட்டத்தின் கீழ் 10 இணை செயலாளர்களை தேர்வு செய்ய விளம்பரம் செய்யப்பட்டது. 6,077 பேர் விண்ணப்பித்தனர்.
* 2019இணைச் செயலாளர் பதவிக்கு 9 பேர்தேர்வு. அதில் 8 பேர் பணியில் சேர்ந்தனர்.
* 2021புதிதாக விண்ணப்பித்த 2031 பேரில் 31 பேர் தேர்வு.
* 2022இவர்களில் 30 பேர் பணியில் சேர்ந்தனர்.
* 2023மேலும் 25 பேர் நேரடியாக பணி நியமனம்.
* 2024நேரடி பணிச்சேர்க்கையின் மூலம் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டதில் 57 பேர் தற்போது பணியில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்.
* தகுதிகள்
இணைச்செயலாளர் பதவிக்கு 15 ஆண்டு பணி அனுபவம். வயது 45 முதல் 55 வரை இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.2.70 லட்சம்.
* பணி காலம்
முதலில் 3 ஆண்டுகள். பணிசெயல்திறன் திருப்திகரமாக இருந்தால் மேலும் 2 ஆண்டுகள் பணிநீட்டிப்பு.