சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி. பணியாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் டி.மகிமை தாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 2013ல் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் கழிவு நீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் இறப்பதும், அவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு தொடர்ந்து, உள்ளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடை முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மீதான வழக்கின் தீர்ப்பில், ‘‘கழிவுநீர் அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழந்தால், அவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். கழிவுநீர் அகற்றும் போது படுகாயமடைந்து நிரந்த உடல் பாதிப்பு அடைந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதர பாதிப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளது. இத் தீர்ப்பை வரவேற்கிறோம். தமிழகத்தில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.