‘‘முக்கிய பிரமுகர் ஆசியால் யூனியன் ஆபிசையே கலங்க விடுறாராமே ஒரு ஆள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் மாவட்டத்தின் முதல்படை வீடு யூனியனில் அந்த அலுவலகத்தையே முதல்படை வீட்டின் கடவுள் பெயர் கொண்ட ஒருவர்தான் இயக்குகிறார். இலைக்கட்சி முக்கிய பிரமுகரின் ஆசி பெற்ற இவர், மாவட்ட திட்ட அதிகாரியின் உதவியாளருக்கு நெருக்கமானவர். இதனால் யூனியனில் கமிஷனர் உட்பட பலரும் இவர் கட்டளைக்கு பணிந்து தான் ஆக வேண்டுமாம். இல்லையென்றால் மேலிடத்து அதிகாரி பெயரை சொல்லியே அவர்களை ஒரு வழி செய்து விடுவார். தற்போது யூனியனுக்கு புதிய கமிஷனர் பதவியேற்க உள்ள நிலையில், புதிய கமிஷனருக்கென இவருக்கு நெருக்கமான இரு பெண் அதிகாரிகளின் பெயர்களை இவர் பரிந்துரைத்துள்ளாராம். இதற்கு அந்த உதவியும் பச்சைக்கொடி காட்டி விட்டாராம். கமிஷனர் நியமனத்திற்கு முன்னரே யூனியன் அலுவலர்கள் மட்டுமின்றி ஒப்பந்தக்காரர்கள் வரை அனைவரையும் மிரட்டுவதாகவும், காட்டும் நீட்டும் இடத்தில் அதிகாரி கையெழுத்திடவும் வற்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு ஆதரவான மற்றும் அதிக கமிஷன் கொடுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டுமே வேலை ஒதுக்கீடு ஆகிறது. அதிலும் இலைக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு புள்ளி வைத்து அதிகாரிகள் மூலம் இழுத்தடிக்கிறார். மேலும் இலைக்கட்சியினருக்கு ஆதரவாக இவர் உள்ளதால் பல்வேறு அரசின் திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள், உயரதிகாரியை சந்தித்து புகார் கொடுக்க சென்றால் மேலிடத்தில் உள்ள இவருக்கு நெருக்கமானவர் மூலம் அந்த புகாரை உயரதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லாமலே புகார் கொடுத்தவர்களுக்கே பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறாராம். அனைவரும் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் சைலன்ட் மோடில் இருந்து வரும் மாஜி அமைச்சரை கிண்டல் அடிக்கிறாங்களாமே தொண்டர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் 2 அணியாக செயல்பட்டதால் அதில் இருந்து தனியாக பிரிந்து சென்ற சேலம்காரருடன் கடலோர பகுதியை சேர்ந்த மாஜி அமைச்சர் மணியானவர் ஐக்கியமானார். இவரை பின்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் அணிவகுத்து சென்றனர். சேலம்காரருக்கு மணியானவர் விசுவாசியாக இருந்தாலும் தேனிக்காரர், குக்கர் தலைமையானவர், சின்னமம்மி ஆகியோருக்கு எதிராக பேசியதே கிடையதாம்… மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தாலும் இலை கட்சியில் என்ன வேணுமானாலும் நடக்கலாம். ஏதாவது வாய் திறந்து பேசி சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளக்கூடாது என மவுனமாக இருப்பதை மணியானவர் வாடிக்கையாக வைத்து இருந்தார். கட்சியில் மணியானவர் மவுனமாக இருந்து வந்தாலும் நிர்வாகிகள், தொண்டர்களுடன் நெருக்கத்தில் இருந்து வந்தார். தாமரை- இலைகட்சி இடையே ஏற்பட்ட பனிப்போரால் தாமரையுடன் கூட்டணியை சேலம்காரர் முறித்துக்கொண்டதால் நிர்வாகிகள், தொண்டர்களுடன் மணியானவர் திடீரென இடைவெளி விட்டே இருந்து வருகிறார். கட்சி சார்பில் நடக்க கூடிய ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட மணியானவர் பங்கேற்பதை குறைத்து கொண்டார். இதில் கலந்து கொண்டு தாமரை மேலிடத்தை பற்றி ஏதாவத பேசி நமது பக்கம் ரெய்டு எதும் திரும்பி விடாக்கூடாது என்ற பயத்தில் மணியானவர் மீண்டும் மவுனமாக இருந்து வருகிறார். இப்படியே மவுனமாக இருந்து வந்தால் மாவட்ட செயலாளர் பதவியையும் விரைவில் இழந்து விடுவார் என தொண்டர்களுக்குள் கிண்டல் அடிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரர் ரொம்பவே ஹேப்பியா இருக்காராமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் ரொம்பவே மனம் நொந்து போயி ஊருக்கு திரும்பியிருக்காரு. பசும்பொன்னில் தங்க கவசம் கிடைச்ச மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் ரொம்பவே சந்தோசமா புறப்பட்டு போயிருக்காரு. ஆனா ரெண்டு வருஷமா பசும்பொன்னுக்கு வராமல் தேர்தலுக்காக வந்திருப்பதாக கருதிய தேனிக்காரரின் அடிப்பொடிகள் கடும் கோஷத்தை எழுப்பியிருக்காங்க. இடியே விழுந்தாலும் சிரிப்பை மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே ஸ்டாரங்கா இருந்திருக்காரு. கடைசி வரை அவரது முகத்தில் எந்த கோபமும் வெளிப்படையலையாம். ‘ரத்த கையெழுத்திட்டு அழைச்சி இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களேன்னு துணைத்தலைவர் பதவிக்கு தவியாய் தவிக்கும் மாஜியை ரொம்பபே கடிஞ்சி கிட்டாராம். ஆனா தேனிக்காரர் இந்த முறை ரொம்பவே கெத்துக் காட்டிட்டாராம். திறந்தவேனில் ஓட்டு கேட்பது போல புறப்பட்டுப் போனாராம். இதனால அவரது அடிப்பொடிகள் ரொம்பவே ஹேப்பியா இருக்காங்களாம். ஓட்டுக்காகவே சேலத்துக்காரர் பசும்பொன்னுக்கு வந்திருக்காரு. பதவிக்காக அவர் எதைவேண்டுமானாலும் செய்வார். ஜெயிலில் இருந்து வந்தவுடன் பொறுப்பை கொடுப்பேன் என்று சின்னமம்மியை ஏமாற்றினார். ரெண்டு ஆண்டுக்கு பிறகு ஆட்சியை தருவேன் என்று தேனிக்காரரை ஏமாற்றினார். தேர்தல் நேரத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு என்று வடமாவட்ட மக்களை ஏமாற்றினார். சொல்வதெல்லாம் பொய், பொய்யைத்தவிர வேறு எதுவுமே சேலத்துக்காரரிடம் இல்லை. ஆனால் பொய்யே சொன்னது இல்லை என மீண்டும் பொய் சொல்கிறார். பசும்பொன்னிலும் நாடகம் நடத்த வந்தவருக்கு பெருத்த ஏமாற்றம் மிஞ்சியுள்ளது என தேனிக்காரரின் அடிப்பொடிகள் ரொம்பவே ஹேப்பியா சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.