Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சாயல்குடி பகுதியில் வெட்டி சாய்க்கப்படும் பனைமரங்கள்: அதிகாரிகள் தடுக்க கோரிக்கை

சாயல்குடி: சாயல்குடி அருகே பனைமரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி-ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையோரம் வாலிநோக்கம் அருகே உள்ள ஓடைக்குளம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இவை சீசனுக்கு பதனீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி செய்தல், பனங்கருப்பட்டி தயாரித்தல், பனைமட்டை, பனை நார், ஓலை மூலம் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பனைமர தொழிலுக்கு பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிலர் மரப்பயன்பாடு, செங்கல்சூளை, மின்உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலை பயன்பாட்டிற்காக இப்பகுதியிலுள்ள 100க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதால் அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓடைக்குளம் பகுதி பனை தொழிலாளர்கள் கூறும்போது, வேர் முதல் ஓலை வரை பயனுள்ளதாக இருப்பதால் பூலோகத்தின் கற்பக தரு(விருட்ஷம்) என அழைக்கப்படும் பனைமரத்தால் தலைமுறை, தலைமுறையாக பல்வேறு குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வாலிநோக்கம் விலக்கு அருகே உள்ள ஓடைக்குளம் பகுதியில் பனை மரத்தின் உரிமையாளர்கள் வியாபாரிகளிடம் மரத்தை விலைக்கு விற்று வருகின்றனர். டிம்பர் பயன்பாடு, தொழிற்சாலை, செங்கல் சூளை உள்ளிட்ட பயன்பாட்டிற்காக வெட்டி துண்டுகளாக்கி லாரிகளில் ஏற்றிச் செல்வதற்காக ஜே.சி.பி இயந்திரங்களை வைத்து மரங்களை வேறோடு சாய்த்து வருகின்றனர், இதனால் இப்பகுதியில் பனைமரங்கள் அழியும் அபாயம் உள்ளது.

ஒரு பனைமரம் பெரிய மரமாக வளர்ந்து பயன்தர 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். இதுபோன்று ஒரு பனைமரம் 100 ஆண்டுகள் வரை பலன் தரும் தன்மை கொண்ட சிறப்புக்குரியது. முதிர்ச்சிக்கு பிறகு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே, அரசு விதிமுறைகளை பின்பற்றி வெட்ட முடியும் என்ற நிலையில் விதிமுறைகளை மீறி வெட்டிச் செல்வதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் வெட்டப்பட்ட பனைமரங்களுக்கு பதிலாக இரண்டு மடங்கு புதிய பனை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.