சேமிப்பு என்றென்றும் முக்கியமானது. வருமானத்தில் ஒரு பகுதியையாவது தொடர்ந்து சேமித்து வந்தால் தான், எதிர்காலத்தில் பெரிய செலவுகளின்போது அது கைகொடுக்கும். வங்கி சேமிப்பு திட்டங்களும் உள்ளன. ஆனால், சிட்பண்ட் என்பது மிகுந்த லாபகரமான சேமிப்பு திட்டமாகக் கருதப்படுகிறது. இது ஒரு கூட்டு சேமிப்பு திட்டம். இதில் ஒரு குழுவினர் கலந்து கொண்டு ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒப்புக்கொள்ளப்பட்ட காலம் வரை செலுத்துகின்றனர். இந்த தொகையை செலுத்தும் சந்தாதாரர்கள் சீட்டு திட்ட காலத்தில், இவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை ஆதாயத்துடன் ஒரு முறை பெறலாம்.
எனவே, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும், செலுத்தப்படும் தவணைகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். ஒவ்வொரு தவணையின் போதும் தொகையை பெறுபவர்கள் ஏலம் அல்லது குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சீட்டு திட்டத்தை ஒரு சீட்டு நிறுவனம் நடத்தி நிர்வகித்து வருகிறது. சிட்பண்டில் சேமிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, சேர்ப்பதற்கான தகுதியான நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து திரட்டப்படும் முதலீட்டுத் தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
ஒவ்வொரு தவணையிலும், தொகையை பெறும் நபரை ஏலம்/குலுக்கல் நடத்தி தேர்ந்தெடுக்கிறது. சந்தாதாரர்களுக்கு தொகையை திரும்ப அளிப்பதற்கு உத்திரவாதம் அளித்து, அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை குறைக்கிறது. இந்த சேவைகளுக்காக சீட்டு கம்பெனி ஒரு கட்டணத்தை வசூலிக்கிறது. அதிக ஆதாயம்: சீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதால் டெபாசிட்டுகளை காட்டிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். இரண்டாவது மாதத்திலிருந்தே தொகையை பெற முடிவதால் வர்த்தகத்திற்கு, அவசரகாலத்திற்கு தேவைப்படும் தொகையை திரட்டி கொள்ளலாம்.
அவசர தேவைக்கு உதவும்: வாடிக்கையாளர்களது அவசர கால தேவைகள் அல்லது வர்த்தக முதலீட்டை செய்ய பணம் தேவைப்படும் போது சீட்டு பணத்தை எடுக்கலாம். மேலும் இதர முதலீட்டில் அதிக ஆதாயம் கிடைக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வதற்கும் இந்த சீட்டு தொகையை எடுக்கலாம். சீட்டு திட்டத்தில் முதலீடு செய்வதால் ஏமாற்றம் ஏற்படுமா? 40/1982ம் ஆண்டு சீட்டு கம்பெனி நிதியங்கள் சட்டத்தின் கீழ் சீட்டு கம்பெனிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன சட்டப்படி முதல் மாதத்தில் திரட்டப்படும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்த தொகை 1982ஆம் ஆண்டு சீட்டு நிதியங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது இந்த சட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யாமல் இயங்கி வருகின்றன. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலும், சில கம்பெனிகள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. எனினும், நம்பகமான நிறுவனங்களில் வாடிக்கையாளர் முதலீடு செய்தால் அந்த தொகை பாதுகாப்பாக இருக்கும்.
* ஏலத்தின் நோக்கம் என்ன?
ஒவ்வொரு குழுவிலும் சில நபர்களுக்கு பணம் தேவைப்படலாம். அதனால் பணம் தேவைப்படுபர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்வார்கள். ஏலத் தேதியின் போது யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறாரோ அவர் தொகையை எடுத்தவராக அறிவிக்கப்படுவார்.
* சேமிப்பு அல்லது கடனினால் வருமான வரியில் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன?
ஈவுத்தொகைக்கு வரி கட்ட வேண்டியது இல்லை. ஏலத்தொகை நஷ்டம் என்று காட்ட வேண்டுமென்றால் ஈவுத்தொகையை மதிப்பீட்டில் வருமானமாக காட்ட வேண்டும். அதனால் சீட்டினால் பெறப்பட்ட தொகைக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை.
* ஏலத்தில் எடுத்த பணம் எப்போது கிடைக்கும்?
ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்த பிறகு ஆவணங்கள் நிறைவானதாக இருந்தால் பணம் வாடிக்கையாளருக்கு செலுத்தப்படும். ஏலம் குறிப்பிட்ட தேதியில் தொடங்கும் சந்தாதாரர்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே குறைந்த பட்ச தொகைக்கு ஏலம் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும்.