சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் சாலையில் ஓடிய புலிக்குட்டிகளை அவ்வழியே பேருந்தில் பயணித்த பயணிகள் கண்டு ரசித்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் புலிகள் அவ்வப்போது நடமாடுகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றிமலை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு புலி குட்டிகள் சாலையில் அங்கும் இங்கும் ஓடின. அரசு பஸ்சின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்ட பிறகும் 2 புலிக்குட்டிகளும் சிறிது தூரம் ஓடியது. பின்னர் அவை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இந்த காட்சியை பஸ்சில் சென்ற பயணிகள் கண்டு மகிழ்ந்ததோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.