சத்தியமங்கலம் : தேசிய நெடுஞ்சாலையில் ‘ஹாயாக’ நடந்து சென்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜாலியாக உலா வந்தது.
அப்போது சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினர். காட்டு யானை சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் காட்டு யானை வாகனங்களை பற்றி கண்டுகொள்ளாமல் சாலையோரமாக ஹாயாக நடந்து சென்றது. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.