சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில் ஜீப்-பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தங்க நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத் (18). பனியன் நிறுவன தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான நிவேஷ் என்பவருடன் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை ஹரிபிரசாத் ஓட்டினார். எஸ்ஆர்டி கார்னர் அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த ஜீப்பும், பைக்கும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். பைக்கை ஓட்டிச் சென்ற ஹரி பிரசாத் சாலையிலும், பின்னால் அமர்ந்து சென்ற நிவேஷ் ஜீப்பின் முன் பகுதியிலும் தூக்கி வீசப்பட்டு விழுந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜீப்-பைக் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நடந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.