வத்திராயிருப்பு : சதுரகிரி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் ஆவணி பிரதோஷம், பவுர்ணமிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசைக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமியையொட்டி இன்று முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து வனத்துறை, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் தேவராஜ் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே சதுரகிரியில் ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமியையொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் சதுரகிரி வருவதை தவிர்க்க வேண்டும். மலையேற அனுமதிக்கப்படமாட்டார்கள்’’ என்று தெரிவித்தார்.