சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் மகளிர் காவல் நிலையம் இடம் தேர்வு செய்யப்படாததால் பெண்களின் புகார் குறித்து அவர்கள் இருப்பிடம் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சாத்தான்குளம், நாசரேத், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சாத்தான்குளத்தில் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்ஸ்பெக்டராக பாமாபத்மினி உள்பட 6க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டனர்.
விசாரணைக்காக இன்ஸ்பெக்டருக்கு வாகனமும் வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் காவல் நிலையம் அமைக்க பழைய தாலுகா அலுவலக கூட்டரங்கு தேர்வு செய்யப்பட்டது. இதனை எஸ்பி பாலாஜி சரவணன், சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் உள்ளிட்டோர் பார்வையிட்டு கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரைத்தனர்.
ஆனால் இந்த இடத்துக்கான அனுமதி வழங்கிட தாமதமானதால் இட்டமொழி சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக காவல் நிலைய அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டது. இதற்கு வர்த்தக சங்கத்தினர், சமுக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையம், டிஎஸ்பி அலுவலகம், தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம் அமைந்துள்ள தாலுகா அலுவலக கூட்டரங்கிலேயே மகளிர் காவல் நிலையம் செயல்பட வேண்டுமென மனு அளித்தனர்.
மேலும் சாத்தான்குளம் தாசில்தார் அலுவலக பழைய கட்டிடம் எதிரிலேயே கூட்டரங்கு கட்டிடத்தில் மகளிர் காவல்நிலையம் அமைக்க வேண்டுமென்று ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, கலெக்டரிடம் முறையிட்டார். கலெக்டரும் அனுமதிப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இடம் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வர்த்தக சங்கத்தினர் திருச்செந்தூர் வந்த கனிமொழி எம்பியிடமும் முறையிட்டனர்.
இந்நிலையில் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில ஆணையரிடம் அனுமதி பெற்ற பிறகுதான் வழங்க முடியும். அதுவரை அந்த கட்டிடம் வழங்க இயலாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக மகளிர் காவல் நிலையத்திற்கு கட்டிடம் கிடைக்காததால் போலீசார் டிஎஸ்பி அலுவலகத்திலும், சாத்தான்குளம் காவல்நிலையத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் பெண்கள் அளிக்கும் புகார்கள் குறித்து விசாரிக்க இடமின்றி இன்ஸ்பெக்டர் அவர்களது இருப்பிடம் மற்றும் அந்தந்த காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்து வருகிறார். எனவே உடனடியாக சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அரசு கட்டிடம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெகன் கூறியதாவது: சாத்தான்குளம் பகுதியில் இருந்து அதிகமான மகளிர் புகார்கள் வருகிறது. இந்த புகார்களை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க பெண்கள் அலைந்து திரிந்தனர். இந்நிலையில் சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையம் அமைக்கப்படும் என்ற தகவலையடுத்து, தங்கள் புகார்களை இங்கேயே நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஆவலாக இருந்தனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக காவல் நிலையம் அமைக்கப்படாததால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு உடனடியாக சாத்தான்குளத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் மகளிர் காவல்நிலையம் அமைக்க வேண்டும், என்றார்.