கல்லூரிப் பேராசிரியர் பணிக்காகப் படித்து விட்டு மேடைப் பேச்சாளர், கல்வியாளர், சமூக சேவகர், எழுத்தாளர் என தனது பணிகளை விரிவுபடுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த சர்மிளா நாச்சியார். குழந்தைகளோடு பயணிப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார் சர்மிளா. தனியொரு பெண்ணாக இத்துறை சார்ந்த கல்விகளை கற்று முறையான பயிற்சிகளோடு இத்துறையில் தடம் பதித்து வரும் சர்மிளா நாச்சியார். தற்போது மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தினை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளில் மற்றுமொரு மைல்கல்லை தொடவிருக்கிறார். ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில்முனைவோர் அனுபவங்கள் அவருக்கு இருந்தாலும் சேவைகள் என் மனதை அமைதிப் படுத்துகிறது என்கிறார். கல்வியாளர் என்பதோடு சிறந்த தொழில்முனைவோராகவும் பன்முகத்தன்மை கொண்டவராக பல துறைகளிலும் அசத்தி வரும் சர்மிளா, தனது கல்வி சார்ந்த பணிகள் குறித்தும் தொழில் முனைவோர் அனுபவங்கள் குறித்தும் சமூக அக்கறை குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
உங்கள் கல்விப் பணிகள் குறித்து…
நான் அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய SET பேராசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். பின்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் MSW மற்றும் NGO management Diploma படித்தேன். சாத்தூர் அரசு கலைக்கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகவும் இருந்துள்ளேன். வைகை மக்கள் இயக்க உறுப்பினர் வாசகர் வட்டம் ரோட்டரி சமஸ்கார் பாரதி கலை இலக்கிய குழு உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர், சினிமா தணிக்கை துறை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். ஆனாலும் பேராசிரியர் பணியை விட குழந்தைகளோடு பணிபுரிவது எனக்கு பிடித்தமான ஒன்றாக தான் தோன்றியது. அதனால் தான் தற்போது நான் மதுரை பகுதியில் குழந்தையர் மழலை பள்ளியினை தொடங்கி நடத்தி வருகிறேன். ஒற்றை குழந்தை யுடன் ஆரம்பித்த பள்ளி இன்று சிறப்பான வளர்ச்சியடைந்ததற்கு எனது உழைப்பும் ஆர்வமுமே காரணம். Diploma in Tourism management & Diploma in Gandhian thought முடித்திருக்கிறேன். எனது சமூக சேவை குறித்த சிந்தனைகளுக்கு இதுவுமே ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். தனி ஒரு பெண்மணியாகவே குடும்பத்தையும், தொழிலையும் இதர சமூகம் சார்ந்த பணிகளையும் திறம்பட நடத்துவது என்பது ஆகப் பெரும் சவால் தான் என்கிறார்.
உங்கள் சமூகப் பணிகள் குறித்து…
நான் கல்லூரியில் படித்த நாட்களில் இருந்தே சமூகப்பணி பற்றிய நிறைய ஆர்வத்துடன் இருப்பேன் அதே போன்று பல்வேறு இடங்களுக்கு பயணப்படும் பொழுது பல மனிதர்களின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் தற்போது இந்த சேவையில் நானும் இணைந்து கொள்கிறேன் என்பதே மகிழ்ச்சியான ஒன்று. தற்போது சிறப்புக் குழந்தைகளான அறிவுத்திறன் குறைபாடுகள் உள்ள மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையம் ஒன்று ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கடவுளின் குழந்தைகள் நமக்கும் குழந்தைகளாக மாறப்போகும் பயணம் நோக்கிய ஒரு சிறந்த முன்னெடுப்பாக இதனை நினைக்கிறேன். நாச்சியார் அறக்கட்டளை என்ற மிகப்பெரிய ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன் அந்நிகழ்வும் மிக விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு சேவைகளை முன்னெடுக்கும் எண்ணங்கள் நிறைய இருக்கிறது. சைக்காலஜி படிப்பு இதற்குப் பெரிதும் உதவியது எனலாம். இவர்களுக்கு இன்னமும் நிறைய கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற எண்ணங்கள் உள்ளது. அதற்கான பல்வேறு கற்றல் வழிமுறைகளையும்
பரிசோதித்து வருகிறேன்.
உங்கள் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் அனுபவங்கள் குறித்து…
எனது முதல் புத்தகம்“முதல் ஞானங்கள்” என்கிற பெயரில் கவிதை தொகுதியாக வெளி வந்து பலரின் பாராட்டுதல்களை பெற்றது. மேலும் நிறைய கவிதைகளை எழுதி வருகிறேன். கூடிய விரைவில் அதனை புத்தகமாக வெளியிடும் கனவுகள் இருக்கிறது. இத்துடன் நிறைய விழாக்களில் தன்னம்பிக்கை நிறைந்த கருத்துக்களை பேசி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நினைக்கிறேன். எனக்கு மேடை பேச்சினில் எப்போதுமே நிறைய ஆர்வங்கள் இருக்கிறது.
விருதுகள் மற்றும் பாராட்டுகள்…
எனது பன்முக பணிகளுக்காக நிறைய விருதுகள் மற்றும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளேன். தமிழன் தமிழச்சி விருது, அறிவு சார் பயிற்றுநர் விருது, மலேசியா முத்தமிழ்சங்கம் வழங்கிய சிறந்த பெண் எழுத்தாளர் விருது, சாதனைப் பெண்மணி விருது , புரட்சி நாயகி விருது, சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மேன்மேலும் மேம்படுத்திக்கொள்ள இந்த விருதுகள் உந்துசக்தியாக இருக்கின்றன என்றால் அதில் மிகையில்லை. கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். கற்றுக் கொடுப்பவருக்கும் சென்ற இடமெல்லாம் மரியாதை தான் என்கிறார் சர்மிளா. எனது சேவையினை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும். வாழ்வில் கடும் போராட்டங்களைச் சந்திக்கும் சிறப்புக் குழந்தைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நிறைய பேருக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகள் செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டங்கள்.
தனி ஒரு பெண்ணாகப் போராடியே பல துறைகளில் என்னை மெருகேற்றி கொண்டு சாதித்து வருகிறேன். என்னை உருவாக்கியதில் என் நண்பர்களின் பங்கும் மிகவும் அதிகம். நானே முயன்று கடுமையாக உழைத்து எனது குடும்ப வாழ்க்கையின் முழுப் பொறுப்பினையும் ஏற்று வருகிறேன். பொதுவாகவே பெண்கள் எதற்காகவும் துவண்டு விடக்கூடாது. உங்களுக்குப் பிடித்தமான துறைகளில் தைரியமாக துணிந்து இறங்குங்கள் வெற்றி உங்கள் வசமாகும். மேலும் நிறைய பெண்களுக்கு ஒரு வேலைவாய்ப்பினையோ அல்லது தொழிலினையோ உருவாக்கித் தரவேண்டும் என்கிற ஆசைகள் எனக்கு இருக்கிறது. விடாமுயற்சியுடன் ஆர்வமும் ஊக்கமும் இருந்தால் என்னால் முடிந்தது போல் உங்களாலும் நிச்சயமாக முடியும் என்கிறார் தன்னம்பிக்கைப் பெண்மணி சர்மிளா.
– தனுஜா ஜெயராமன்