திருச்சி: பூட்டி கிடந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், நகை, பணம் கிடைக்காததால் ‘சாரி’ பிரதர் அன்ட் சிஸ்டர்’ என சுவரில் எழுதி சென்றுள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூரில் பெரம்பலூர் புறவழிச்சாலை, செல்வம் நகரை சேர்ந்தவர் இளங்கோ. தனியார் வங்கி மேலாளர். இவரது மனைவி மஞ்சு. 2 மகன்கள் உள்ளனர். வாடகை வீட்டில் வசித்து வரும் இளங்கோ, கடந்த 2 வாரத்துக்கு முன்பு மனைவி, குழந்தைகளுடன் காரில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இளங்கோ துறையூர் திரும்பினார்.
அப்போது இவரது வீட்டின் முன்புற கேட் மற்றும் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததும், வீட்டின் போர்டிகோவில் நின்றிருந்த டூ வீலர் திருட்டு போனதும் தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறைக்குள் இருந்த மர பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் நகை, பணம் ஏதும் கிடைக்காததால் விரக்தியில் உள்புற அறையின் சுவரில், ‘‘சாரி பிரதர் அண்ட் சிஸ்டர், மன்னித்து விடுங்கள்’’ என கிரேயான் பென்சிலால் எழுதிவிட்டு சென்றிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக இளங்கோ அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.