ஆர்.கே.பேட்டை: சாணுர்மல்லாவரம் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக வழங்கிய நிலத்திற்கு மாற்றுயிடம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சாணூர் மல்லாவரம் கிராமத்தில் கடந்த 1985ல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆறுமுகம் என்பவர் 0.40 சென்ட் நிலத்தை வழங்கியுள்ளார். பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதால், சிதிலமடைந்த கட்டிடத்தை சீரமைக்கும் பணி மற்றும் வண்ணம் அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 1985ல் ஆறுமுகம் வழங்கிய நிலம் சம்பந்தமாக எந்த ஆவணமும் மாற்றப்படாததால் ஆறுமுகம் பெயரிலேயே உள்ளது. இதனையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் பொன்னி மேகநாதன் என்பவர் பத்திரத்தை பெயர் மாற்றம் செய்து தருமாறு ஆறுமுகத்தின் மகன் மணியிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது தங்களது குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், தந்தை பள்ளி கட்டுவதற்காக வழங்கிய நிலத்திற்கு பதிலாக தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஆறுமுகம் மகன் மணி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஆறுமுகம், மகன் மணியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலத்திற்கான சிட்டா, அடங்கல், பட்டா என அனைத்தும் எங்கள் பெயரிலேயே இருப்பதால் எங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என வட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருப்பதாக மணி தெரிவித்துள்ளார். அரசு நிலம் ஒதுக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும், இதுகுறித்து வட்டாட்சியர் பரிந்துரை செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதற்கு மணி சம்மதம் தெரிவித்ததால் சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்கும் பணி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.