சென்னை : சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம். உலக தாய் மொழி தினத்தை கொண்டாடுவோம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் உள்ள பன்முக மொழி, கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மொழிகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் இந்த தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, கடந்த 1999ம் ஆண்டு தாய்மொழி தினத்தை அங்கீகரித்தது. பங்களாதேஷ் அரசின் தொடர் முயற்சிகளாலும், உலக நாடுகளின் ஆதரவாலும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், சமஸ்கிருதத்தை பேசவோ, எழுதவோ தெரிந்த ஒருவர்கூட இல்லாத நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசும் அனைத்தையும் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கும் வசதியை செய்துள்ளது ஒன்றிய அரசு. ஆனால் கோடிக்கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வுகளை அவரவர்களின் தாய்மொழியில் நடத்த மறுத்து இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நடத்துகிறது. சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம். உலக தாய் மொழி தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.