விழுப்புரம்: அவதூறு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் 3வது முறையாக சி.வி.சண்முகம் ஆஜரானார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் 2023 மார்ச் 7ம் தேதி நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திலும், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் கடந்த மார்ச் 10ம் தேதி நடந்த அதிமுக நிகழ்ச்சியிலும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழ்நாடு அரசுக்கும், முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகளை தொடர்ந்தார். இந்த வழக்குகள் பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. 3வது முறையாக நேரில் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் விசாரணையை வரும் டிசம்பர் 21ம் தேதிக்கு பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.