*பயணிகள் அவதி
சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் தற்காலிக பயணிகள் நிழற்குடை வாகனங்கள் நிறுத்தமாக மாறியதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சங்கரன்கோவிலில் தற்போது புதிய பேருந்து விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக பயணிகள் வசதிக்காக புதிய நகராட்சி அலுவலகம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் தேரடி, தெற்கு ரத வீதி, மெயின்ரோடு, திருவேங்கடம் சாலை, கழுகுமலை சாலை ஆகிய பகுதிகளில் இருந்து காத்திருந்து பேருந்து ஏறி செல்லும் சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் நகராட்சி சார்பில் பொதுமக்கள் காத்திருக்கும் இடங்களில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு செய்யப்பட்டு திருவேங்கடம் சாலையில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்களில் வருவோர் அந்த நிழற்குடையை வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருவதால் பயணிகள் வெயிலில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளதால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையில் வாகனங்கள் நிறுத்தாத வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.