Monday, December 2, 2024
Home » செல்வ வளங்களை வாரி வழங்கும் சங்கரனாரின் சங்காபிஷேகம்

செல்வ வளங்களை வாரி வழங்கும் சங்கரனாரின் சங்காபிஷேகம்

by Nithya

ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். கல்லினாலோ அல்லது பஞ்சலோகத்தினாலோ வடிக்கப்பட்ட கடவுளின் விக்ரஹத்திற்கு பால், தயிர், கனி வகைகள் என்று நானாவித திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின்னணியில் ஒரு ஆழ்ந்த தத்துவம் பொதிந்துள்ளது. அந்தத் தத்துவம்தான் அனாதியான இந்து மதத்தின் தனிப்பெரும் சிறப்பு. ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில்தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

நம்முடைய இந்த மதத்தில்தான், நம்மைப் போலவே இறைவனையும் எண்ணி, அபிஷேகம், அலங்காரம், நிவேதனம் என்று செய்து மகிழ்கிறோம். அப்படி இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, பால், தயிர், தேன், பழச்சாறு போன்ற திரவியங்கள், கருவறைக்கு வெளியில் உள்ள ஒரு தொட்டியில் வந்து விழும். அதனை அனைவரும், ஏழை, பணக்காரன் என்ற எந்த ஒரு வித்தியாசமும் இன்றி அருட்பிரசாதமாகப் பெறுகிறார்கள்.

ஓம் என்னும் பிரணவம்

மூல மூர்த்தங்களும் சரி, மூல மூர்த்தங்கள் அசையாமல் இருப்பதற்காகச் சாத்தப்படும் அஷ்ட பந்தனமும் சரி, மந்திர சக்தியும், மூலிகை சக்தியும் பெற்றிருப்பதால், அபிஷேகம் செய்யப்படும் திரவியமானது அருட்பிரசாதமாக மட்டுமல்லாமல், அருமருந்தாகவும் திகழ்கின்றது. இருந்தாலும், சங்கு தீர்த்தத்தினால் செய்யப்படும் அபிஷேகம் தனிச் சிறப்பு கொண்டதாகும். சங்கு தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்வதானது, அந்தப் பிரணவமாகிய ஓம் காரத்தினாலேயே, அந்தப் பிரணவத்தின் வடிவமே ஆகிய பரம்பொருளுக்கு அபிஷேகம் செய்வது போன்றதாகும். எப்படி? சங்குகள் கடலில் தோன்றுகின்றன என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். சங்கை நம் காதில் வைத்து உற்றுக் கேட்டால், கடலில் இரைச்சல் போன்ற சப்தம் கேட்கும். உண்மையில் அது பொருளற்ற வெற்று இரைச்சல் அல்ல. பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார ஸ்ருதியான ‘‘ஓம்’’ காரத்தின் ஒலி.

ஒலி மாசு மறுவே இல்லாத கடற்கரைக்குச் சென்று, மனதை தியான நிலையில் ஒருமுகப்படுத்தி, கடல் அலைகளில் ஓசையை உற்றுக்கேட்டால், அது ஓம்காரமாக ஒலிப்பதை உணரலாம். அதேபோல் அந்தக் கடலில் இருந்து தோன்றக் கூடிய சங்குகளிலும் கடலைப் போலவே ‘‘ஓம்’’காரம் ஒலிப்பதைக் கேட்கலாம். எனில் ‘‘ஓம்’’காரம் ஒலிக்கும் சங்கில் தீர்த்தம் நிரப்பி, ‘‘ஓம்’’காரப் பொருளாகிய அந்தப் பரம் பொருளுக்கு அபிஷேகம் செய்வது என்பது தனிச்சிறப்பு
கொண்டது தானே!

சங்கு தீர்த்தம்

சங்குகள் தெய்வ வழிபாட்டிற்குச் சிறப்பானவை. சங்கு தீர்த்தமானது தெய்வங்களுக்கு மிகுந்த பிரீதியைத் தரும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சங்கு தீர்த்தமானது மற்ற தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் மகா புண்ணிய தீர்த்தமாகிறது. சங்கு தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதானது, சகல புண்ணிய நதிகளாலும் அபிஷேகம் செய்யப்பட்டதற்குச் சமமாகும். சங்கு ஒலிக்கும் இடத்தில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். சங்கு இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி இருப்பது மட்டுமன்றி, அமங்கல வஸ்துக்கள் எல்லாம் அகன்று போகின்றன. எந்த ஒரு வீட்டின் பூஜை அறையில் சங்கு இடம் பெறவில்லையோ, அந்த வீட்டை விட்டு லட்சுமி தேவி விலகிப் போகிறாள். இத்தனை சிறப்புகள் கொண்டதும், சதா சர்வ காலமும் ஓம்காரம் என்னும் ஒலியைத் தன்னகத்தே கொண்டதுமாகிய சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது என்பது தனிச் சிறப்பானது மட்டுமல்ல, இறைவனின் பூரண அருளை நமக்குப் பெற்றுத் தருவதுமாகும்.

தோஷம் நீக்கும்

கார்த்திகை மாதம் சிவபெருமானை தீப ஒளியால் மகிழ்விக்க வேண்டும் என்பது சிவாகம சாத்திரங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் தீப ஒளியாலும், யோகாக்னியாலும் ஏற்படும் வெப்பத்தைச் சமன் செய்யவும் சிவ ரூபத்தைக் குளிர்விக்கவும் சங்காபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது. ஜோதிடப்படி கார்த்திகை மாதம் சூரியன் தன் பகைவீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். சந்திரனும் நீசத்தில் இருப்பதும் தோஷம் என்பதால் தோஷத்தை நீக்க சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

ஆண்டவனுக்கு ஏது தோஷம் என்று கேட்கலாம். ஆனால் தோஷம் நமக்குத்தான். சங்காபிஷேகத்தைப் பார்த்தாலோ, சிவமூர்த்தத்திலிருந்து விழும் தீர்த்தத்தைப் பருகினாலோ நம் உடல்நிலை சமன் நிலை அடையும். தோஷம் நீங்கும் பிணிகள் அண்டாது. ஆகவேதான், கார்த்திகை மாதத்தில் சிவாலயங்களில் 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்காபிஷேகங்கள் நடக்கும்.

அபிஷேகம் செய்யும் விதம்

வாழை இலை மீது தானியங்களை பரப்பி அதன் மீது சங்குகளை ஒழுங்கு முறையாக வைத்து நீர் வார்த்து மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகிப்பர். சங்காபிஷேகம் நடக்கும் முக்கியமான கோயில்கள் திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருவானைக்கோயில், பேரூர், போளுர், திருவேடகம், திருப்பாதிரிப் புலியூர், ராமேஸ்வரம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆகிய கோயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு வலம்புரிச்சங்கு கோடி இடம்புரிச் சங்குகளுக்கு சமம், எனவே சுவாமிக்கு வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால் விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரிச் சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

அக்னி பிழம்பு

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாகக் காட்சி தருகிறார். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவன் கோயில்களில் இறைவனைக் குளிர்விக்க சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவபூஜையில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது இத்தகைய சிறப்பு மிக்க சங்காபிஷேகத்தைக் கண்டால் ஐஸ்வரியம், லட்சுமிகடாட்சம் நிறையவே கிடைக்கும். இதனை புலிப்பாணி சித்தர்

‘‘சிவனார்க் கேத்த நாளதனிலே
சங்காபிடேகம் கண்டுய்ய
ரிசியருடனே சனகனு மதிலை
யாண்டானு மருபியென நிற்ப
கண்டு புளங்காகித மெய்தினமே’’
– என்று பாடுகிறார்.

சிவராத்திரி காலத்தில் இம்மையிலும் நன்மை பயக்கும் சிவனாருக்கு பலவித ேஹாமங்களும், சங்காபிேஷகமும் நடப்பதை பற்பல ரிஷிகளுடன் தசரத மகாராஜனும் அரூபமாக இருந்து தொழுவதை நேரில் பார்த்து இன்புற்றோம் என்று பேசி மகிழ்கிறார், புலிப்பாணி சித்தர்.

சங்குகள் வைக்கும் முறை

108, 1008 சங்குகளையும் இறைவன் திருச்சந்நதியில், பன்னிரண்டு ராசிக்குண்டங்களாகப் பிரித்து, ஒவ்வோர் ராசி குண்டங்களிலும் ஒன்பது சங்குகள் வீதம் 12 ராசிகளிலும் 108 சங்குகள் வைத்து, எட்டுதிக்குகளுக்கும் எட்டுப் பிரதான சங்குகளையும் நடுவில் வலம்புரி, இடம்புரி என்ற இரு சங்குகளையும் ‘‘சிவசக்தி’’ என அமைத்தல் வேண்டும்.

வலம்புரி, இடம்புரிச் சங்குகளைச் சுவாமியாகவும், அம்பாளாகவும் பாவித்து பிரதிஷ்டை செய்ய வேண்டும், இவ்வாறு அமைக்கப்பெற்ற 118 சங்குகளிலும் ‘‘1+1+8=10=1’’ எல்லாம் ‘‘ஒருவனே’’ என்ற தத்துவப் படியும் அமைத்தல்
வேண்டும்.

உடம்பின் அமைப்புப்படி குடத்தில் உள்ள தேங்காய் தலையாகவும், தர்ப்பை முடிகள் தலைமயிராகவும், மாவிலைகள் அவயங்களாகவும், வெள்ளைநூல் நரம்புகளாகவும், கலர்நூல் எலும்புகளாகவும், தசைகளாகவும் நிரப்புகின்ற நன்னீர் ரத்தமாகவும், பாவிக்கின்ற தத்துவப்படி, இரண்டு வெள்ளிக் குடங்களில் நன்னீர் நிரப்பி அவற்றில் கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கோரோசனை, புனுகு, விளாமிச்சை வேர், ஏலம், பன்னீர், மஞ்சள் முதலிய வாசனைத் திரவியங்களைச் சேர்த்து, ஒவ்வொரு சங்கிலும் மாவிலை, தர்ப்பை, மலர்வைத்து யாக குண்டத்தில் எதிரில் அமைத்தல் வேண்டும்.

பூஜைமுறை

சங்குகள் ஒவ்வொன்றும் ‘ஓம், ஓம்’ என்று ஒலித்துக் கொண்டிருக்கும். யாககுண்டத்தைச் சுற்றி ஐந்து நாழிகை நேரம் ஓங்கார மந்திரம் ஜெபிக்க, அம்மந்திரம் தீர்த்தத்தில் கலக்கிறது. தர்ப்பைப்புல் மூலம் தெய்வச் சக்திகளையும், மாவிலையில் உள்ள துவர்ப்பு சக்தியையும் ஈர்த்துக் கொள்கிறது. வேதசாஸ்திரங்களின் ஜெப மந்திரங்களும் ஓதி ஒவ்வோர் ராசி மண்டலத்திற்கும் எட்டுத் திக்குகளிலுள்ள சங்குகளுக்கும் வலம்புரி, இடம்புரிச் சங்குகளுக்கும் முறையே பூஜைகள் செய்தல் வேண்டும். அதன் பின்னர் வேள்வி மண்டபத்தில் யாக குண்டத்தில் ஆகவணீயம், தட்சிணாக்கினியம், காருகாபத்தியம் என்னும் முத்தீயை முறையே அத்தி, ஆல், அரசு, மா, பலா, வெள்ளெருக்கு, வன்னி, நாயுருவி, தர்ப்பை முதலிய சமித்துக்களால் வளர்த்து.

நவதானியம், வாசனாதி திரவியம், கனிவகை, தேன், தேங்காய், பீதாம்பரம், இலவங்கம், தாம்பூலம், பொரி முதலியவற்றோடு நறுநெய் தாரையாகப் பெய்து ஒரே ஜோதிப்பிழம்பாக அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணைக் கடவுளுக்கு அக்னிமூலமாகக் கொடுத்து பலி போட்டு காரியாக்கினியிலிருந்து மூலாக்கினியாகிய இரு சங்குகளிலும் பிரதிஷ்டை முடித்து தூபதீப, நிவேதனம், கற்பூரார்த்தி முதலியவற்றைச் செய்து, வாத்தியங்களோடு பிராகாரம் வலம் எழுந்தருளச் செய்து உலகம் தீங்கின்றி உய்யும் பொருட்டு வேண்டிக் கொண்டு, ஆசிபெற்று ஒவ்வொரு சங்கு தீர்த்தத்தாலும் இறைவனை முறையே அபிஷேகம் செய்வித்தல் வேண்டும்.

தொடர்ந்து பல தீபங்கள் ஏற்றி கண்கவர் அலங்காரங்கள் செய்து நவகிரக அலங்கார தீபத்தால், பஞ்சபூதம், பஞ்சஇந்திரியம் (ஐம்புலன்கள்) ஐந்து முகங்களுக்கு பஞ்சமுக தீபாராதனையாக ஜீவன்கள் சுகவாழ்வு பெற வேண்டி கற்பூரார்த்தி முதலிய மங்களகரமான ஆராதனைகள் செய்தல் வேண்டும்.

You may also like

Leave a Comment

ten + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi