Saturday, July 12, 2025
Home ஆன்மிகம் காக்காசுரனை வதம் செய்த சஞ்சீவிராயர்

காக்காசுரனை வதம் செய்த சஞ்சீவிராயர்

by Lavanya

இந்தத் தொகுப்பில் நாம் காணவிருக்கும் அனுமனின் பெயர் “ஸ்ரீ சஞ்சீவிராயர் என்கின்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’. இவர் காக்களூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். காக்களூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இவரை தரிசிப்பதற்கு முன்பாக, அனுமனை பிரதிஷ்டை செய்த மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரை பற்றி நாம் ஏற்கனவே பல கட்டுரைகளில் தெரிந்துகொண்டு வந்திருக்கின்றோம். அதே போல், இந்த கட்டுரையிலும் வியாசராஜரை பற்றிய மேலும் சில தகவல்களை அறிந்துகொண்டு, அதன் பிறகு காக்களூர் சஞ்சீவிராயரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துகொள்வோமா!

வியாச சரித்திரம்

துவைத சித்தாந்தத்தை ஸ்தாபித்த ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வழிவந்த இன்னொரு மத்வ குருவாக போற்றப்படும் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், கி.பி.1447 முதல் 1529 வரை அவரின் வாழ்ந்த காலமாக கருதப்படுகிறது. அப்போதுதான் அவர் 732 ஆஞ்சநேயர்களை, தான் தேச சஞ்சாரம் மேற்கொள்ளும் போது பிரதிஷ்டை செய்திருக்கிறார். இது சம்மந்தமாக “ஸ்ரீ வியாச சரித்திரம்’’ என்னும் நூல் உறுதிபட குறிப்பிடுகிறது. மேலும், ஸ்ரீ வியாச சரித்திரத்தில் இன்னும் துல்லியமாக பல அதிசய செய்திகள் காணப்படுகின்றன. அதில், ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் கி.பி. 1447 ஸ்ரீ ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 ஆம் தேதி அதாவது பிரபவ வருடம் வைகாசி சுத்த சப்தமி, ஞாயிறு அன்று வியாசராஜர் அவதரித்ததாக அந்த நூல் கூறுகிறது. அதுமட்டுமா! வியாசராஜரின் கோத்திரம், அவரின் தாய் ஸ்ரீ தந்தையர், அவரின் குரு ஆகியவை பற்றிய தகவல்கள் நம்மை ஆச்சரியப்படவைக்கிறது.

வியாசராஜரின் குரு

ஆம்..! ஸ்ரீ வியாசராஜதீர்த்தர், காஸ்யப கோத்திரத்தை சேர்ந்தவராம். அவரின் பெற்றோர் ஸ்ரீ ராமாச்சார் ஸ்ரீ சீதாபாய் ஆவார். அன்றைய மைசூர் ஜில்லா, காவிரி நதியின் அருகில் உள்ள பன்னுர் என்னும் கிராமத்தில் அவதரித்தார், மகான் ஸ்ரீ வியாசராஜர். தனது ஐந்தாவது வயதில் ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தரால் உபநயனம் செய்துவைக்கப்பட்டு, அவரிடத்தில் வேதாந்தங்களை கற்று தேர்ந்து, ஏழாவது வயதில் “ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர்’’ என்னும் திருநாமம் பெற்று சந்நியாசம் தீட்சம் பெற்றார். அதன் பின், பாரத தேசம் முழுவதிலும் சஞ்சாரம் மேற்கொண்டு, துவைத தத்துவத்தை பரப்பினார். விஜய நகர சாம்ராஜ்ஜிய மன்னர்களுக்கு ராஜ குருவாக இருந்து அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் சமயத்தில் அவர்களை காப்பாற்றி நல்வழிப்படுத்தியிருக்கிறார். சிறப்பிலும் சிறப்பு என்னவென்றால், பன்னிரண்டு ஆண்டு காலம் திருப்பதி திருமலையில் இருக்கக்கூடிய வேங்கடவனை பூஜித்த பெருமை வியாசராஜருக்கு உண்டு. அவரின் காலத்தில் வாழ்ந்த புரந்தரதாசர் போன்ற தாசர்களை ஊக்குவித்து, பகவானின் மகிமைகளை பாடல்கள் மூலமாகவும், பஜனைகள் மூலமாகவும் மக்களுக்கு பக்தியை ஏற்படுத்தினார். இப்படியாக மகான் ஸ்ரீ வியாசராஜரின் மகிமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்தடுத்து தொகுப்பில் இன்னும் பல மகிமைகளை பற்றி காண்போம். இனி.. அனுமன்.

வழிகாட்டிய மனிதர்

காக்களூர், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது. நாம் நம் பயணத்தை சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கினோம். சுமார் காலை 7.30 இருக்கும். அரக்கோணம் மின்சார ரயில் வண்டி கொரட்டூர் ரயில் நிலையத்திற்குள் வந்தது. அதில் ஏறி “புட்லூர்’’ ரயில் நிலையத்தில் நாம் இறங்க வேண்டும். காலை நேரம் மின்தொடர் வண்டியின் பயணம், மற்றும் எதிர்காற்று மனதை சற்று அமைதிப்படுத்தியது. செவ்வாய்ப் பேட்டை ரயில் நிறுத்தத்திற்கு அடுத்த ரயில் நிறுத்தம் புட்லூர் என்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். இருந்தபோதிலும், என் எதிர்திசையில் இருப்பவரிடத்தில்;
“ஐயா.. நான் புட்லூரில் இறங்க வேண்டும், கொஞ்சம் சொல்றீங்களா?’’ என்றேன்.“கண்டிப்பாக சொல்கிறேன். ஆமா… புட்லூரில் நீங்கள் எங்கே செல்ல
வேண்டும்’’ என்கிறார் அவர்.
“காக்களூர் அனுமன் கோயில்’’
என்றேன்.
“அட… எனக்கு நல்லா தெரியும்.’’ என்று காக்களூர் அனுமன் கோயில், அதன் அருகில் இருக்கும் ஜலநாராயண பெருமாள் போன்ற திருக்கோயில்களை பற்றியும் முழு விவரங்களை கொடுத்தார். நாம் மனதார வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை தேடி, வாசகர்களுக்காக எழுத வேண்டும், வெளிக்கொணர்வு செய்யவேண்டும் என்று நினைத்தால், அனுமனே மனித உருவில் வந்திருந்து நமக்கு வழிகாட்டுவார் என்பதற்கு இது ஒரு சான்று.
“தெய்வம் மனுஷ்ய ரூபேண’’
(Daivam manushya rupena)
என்று நினைத்துக் கொண்டு, புட்லூரில் இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக காக்களூரில் உள்ள “அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண சமேத ஸ்ரீ சஞ்சீவிராயர் என்கின்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’ திருக்கோயிலை அடைந்தோம். மிக சிறிய கோயிலாக இருந்தாலும், பழமை மாறாத அதன் தோற்றம் நம்மை பக்தி பரவசத்தில் மூழ்கடிக்க செய்தது.

காக்களூர் பெயர் காரணம்

காக்காசுரன் என்னும் அசுரன், இந்த ஊரை ஆண்டு வந்தான். சாதுக்களையும் ஊர் மக்களையும் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான், காக்காசுரன். ஒரு கட்டத்தில் கொடுமைகளை பொறுக்கமுடியாத ஊர் மக்களும், சாதுக்களும் ஸ்ரீ வியாசராஜரை நாடி இதற்கொரு தீர்வை கேட்கிறார்கள். வியாசராஜருக்கு தெரிந்ததெல்லாம் தன் குரு ஸ்தானத்தில் இருக்கும் அனுமன்தான். உடனடியாக அனுமனை பிரதிஷ்டை செய்கிறார். மக்களுக்காக பிராத்திக்கிறார். ஒருவர் பஸ்மமாக வேண்டும் என்று சொன்னால், அவரை தீயிட்டு கொழித்திவிட்டால்தான் சாத்தியம் அல்லவா..! ஆனால், இங்கு அந்த காக்காசுரனை வதம் செய்ய அனுமன், வாயு (காற்று) வழியாக ரைக்காற்று வீசி காக்காசுரனை பஸ்மமாக்குகிறார். அதன் பின் ஊர்மக்களும், சாதுக்களும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதனால் இந்த ஊர், “காக்காசுர பட்டினம்’’ என்னும் பெயர் பெற்றது. அதுவே பின்பு நாளடைவில் மருவி, “காக்களூர்’’ என்றாகிவிட்டது.

ஒன்பது அடி அனுமன்

சுமார் 532 ஆண்டுகளுக்கு முன் வியாசராஜர், காக்களூரில் ஸ்ரீ சஞ்சீவிராயரை பிரதிஷ்டை செய்தார். இருந்த போதிலும் கோயிலின் உள்ளே சென்றதும் ஆங்காங்கே இருக்கும் தூண்கள் நம்மை கவர்ந்து இழுத்தன. மேலும் சற்று உள்ளே சென்றால், மூலவரான சஞ்சீவிராயரை (அனுமன்) தரிசிக்கலாம். ஒன்பது அடி உயரத்தில் மிக பெரிய தோற்றம் கொண்டு காட்சியளிக்கிறார். அனுமனின் இருதயத்தில் ராமரும் ஸ்ரீ சீதையும் ஸ்ரீ லட்சுமணரும் சேர்ந்திருக்கும் பெரிய ஆபரணம் ஒன்றையும் அணிந்துள்ளார். இந்த சஞ்சீவிராயர் என்கின்ற வீர ஆஞ்சநேயரின் சிரசில் (தலையில்) குடுமி இருக்கும். இது ஞானத்திற்கான அடையாளமாகும். அனுமனின் வால் பகுதி ஓங்கார வடிவில் இருக்கும். வால் நுனியில் சிறிய மணியும் காணப்படும். இது சுபம் மற்றும் வெற்றியின் அடையாளமாகும். வலது கரத்தை சிரஸிற்கு மேல் உயர்த்தி அபய ஹஸ்தத்துடன் காட்சியளிக்கிறார், சஞ்சீவிராயர். இது பக்தர்களை காப்பாற்றவும், தீயவர்களை ஒழிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களின் பிராத்தனைகளை அறிந்து, அதை தீர்த்து ஐஸ்வர்யத்தை அளித்து அருள்புரிகின்றார்.

இனி பயம் எதற்கு?

இங்கு மூலவரான ஸ்ரீ சஞ்சீவிராயர் என்கின்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் அருகிலேயே உற்சவரான அனுமார் இடுப்பில் கைவைத்தபடி அருள்கிறார். அவரை கண்ட மாத்திரத்தில் நமக்குள்ளும் கம்பீரம் மேல் ஓங்குகிறது. சஞ்சீவிராயர் அருகிலேயே ஸ்ரீ லட்சுமி நாராயணர் இருக்கிறார். அதனால்தான் இந்த திருக்கோயிலுக்கு “அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண சமேத ஸ்ரீ சஞ்சீவிராயர் என்கின்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’ என்று பெயர். அவரின் அருகில் சிறிய அனுமாரும் இருக்கிறார். சஞ்சீவிராயர் முன்பாக ராமரின் பாதம் இருக்கின்றன. சஞ்சீவிராயர் அனுமனை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும் போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது;
“அஞ்சிகிந்யதகய்யா சஜ்ஜனரிகே
அஞ்சிகிந்யதகய்யா….
சஞ்சீவராயரா ஸ்மரனே மதிடா மேல’’
அதாவது, சஞ்சீவிராயரை வேண்டியவுடன் “இனி பயமெதற்கு?’’ என்று பொருள் உணர்த்தும் புரந்தரதாஸரின் கன்னட பாடல் நினைவுக்கு வருகிறது.

அழகிய பிராகாரம்

பிராகாரத்தில், ஸ்ரீ ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் முன்பாக அனுமாரை வேண்டி விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள். பிராகாரத்தை சுற்றி வந்தோமேயானால், ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர், வியாசராஜர், அனுமா ஸ்ரீ பீமா ஸ்ரீ மத்வா, ராகவேந்திரர் ஆகிய வண்ண ஓவியங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அப்படியே பிராகாரத்தின் நடுவில் தனிக் கோயிலாக விநாயகப் பெருமான் கோயில் கொண்டு அருள்கிறார். அவரை சேவித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், மிக தொலைவில் இருந்து முழு உருவத்துடன் கூடிய சஞ்சீவிராயர் நம் கண்களுக்கு மீண்டும் தெரிவார். “எனது கவலைகள் அனைத்தும் உன்னிடம் கொடுத்துவிட்டேன். இனி நீ அதை பார்த்துக்கொள்’’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு வரும், நம் மனம்.இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1952 ஆம் ஆண்டிலும், இரண்டாம் கும்பாபிஷேகம் 1996 ஆம் ஆண்டிலும், மூன்றாம் கும்பாபிஷேகம் 2009 ஆம் ஆண்டிலும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

விழாக்கள்

ஆண்டுதோறும் ஸ்ரீ ராமநவமி,
ஸ்ரீ அனுமன் ஜெயந்தி ஆகிய விழாக் காலங்களில், உற்சவங்களும்
பஜனைகளும் நடைபெறுகின்றன.

ரா.ரெங்கராஜன்

எப்படி? எப்பொழுது? செல்லலாம்…
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 முதல் 1.00 மணி வரை, மாலை 03.00 முதல் 08.00 வரை.
அமைவிடம்: அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண சமேத ஸ்ரீ சஞ்சீவிராயர் என்கின்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், காக்களூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டம். கோயில் தொடர்புக்கு: 044 ஸ்ரீ 2766 0041.
சென்னை சென்ட்ரலில் இருந்து எண்ணற்ற பல மின்சார ரயில்கள், புட்லூருக்கு செல்கின்றன. புட்லூரில் இறங்கி ஆட்டோவில் பயணித்தால் காக்களூர் சஞ்சீவிராயர் கோயிலை அடைந்து விடலாம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi