சென்னை: தூய்மைப்பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம் தொடர்பான விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. தூய்மைப்பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மைப்பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் ஒன்றிய அரசு, நமஸ்தே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி யூடியூபர் சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன் மற்றும் லட்சுமி நாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தூய்மைப்பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் இந்த திட்டத்தில் 213 தகுதியான பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஆதரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, ஜென் கிரீன் லாஜிஸ்டிக் தரப்பில், இந்த திட்டத்தால் உண்மையாக பட்டியலின மற்றும் பழங்குடியினர் பயனடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், விசாரணையின்போது (தலித் இண்டியன் சேம்பர் ஆப் காமர்ஸ்) இந்திய தலித் வர்த்தக சபையின் தலைவர், உரியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை இந்த திட்டத்தில் பங்குகொள்ள வைக்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
இயற்கை நியதிக்கு உட்பட்டு தகுதியுள்ள பயனாளிகளை அதிகாரிகள் கண்டறிய வேண்டும். தலித் இண்டியன் சேம்பர் ஆப் காமர்ஸ் மட்டுமே இந்த திட்டத்தின் பங்குதாரர்களையும், நிர்வாகத்தையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கும். இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. ஒப்பந்தம் பெற்றவர்கள் குறித்து ஆய்வு செய்து உரியவர்களுக்கு டெண்டர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.