உடுமலை: அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு துப்புரவு தொழிலாளி சிகிச்சையளித்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவிய நிலையில், போதிய மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. தாலுகா மருத்துவமனையான இங்கு போதிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அவசர சிகிச்சை கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு வாலிபர் ஒருவர் நள்ளிரவு சென்றுள்ளார்.
அப்போது, காயத்தை சுத்தம் செய்து கட்டுப்போடும் பணியை பெண் தூய்மை பணியாளர் ஒருவர் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,“ஏழை, எளியவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக நம்பியுள்ள அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவம் வேதனையளிப்பதாக உள்ளது. எனவே, அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர், நர்ஸ், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். விபத்து கால எலும்பு முறிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை வசதிகளை உருவாக்கி உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து நர்சு ஒருவர் கூறுகையில்,“காலில் ஏற்கனவே போடப்பட்டிருந்த கட்டை மட்டும்தான் துப்புரவு பணியாளர் கத்தரிக்கோல் மூலம் அகற்றினார். பின்னர் நாங்கள்தான் சுத்தப்படுத்தி, மருந்து போட்டு மீண்டும் கட்டுபோட்டோம். துப்புரவு பணியாளர் பழைய கட்டை அகற்றுவதை மட்டும் வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர்” என்றார்.