ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்கள், கல்வி அலுவலகம், அங்கன்வாடி மையங்கள் அமைக்க மேலும் 2 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி உதவியை சன் டி.வி. வழங்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் 19 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் சன் டி.வி. சார்பில் சன் டி.வி. குழுமத்தின் நிர்வாக இயக்குநர் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த துணை சுகாதார நிலையங்களுக்கான பொதுமக்களின் பங்களிப்பான மூன்றில் ஒரு பங்குதொகையை சன் டி.வி. அளித்தது. இந்த 19 துணை சுகாதார நிலையங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள சன் டி.வி. குழுமம் சார்பில் 2 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் காந்தி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் சன் டி.வி. குழுமத்தின் நிர்வாக இயக்குநர் காவேரி கலாநிதி மாறன் நேற்று வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா, அம்மூர் பகுதியில் 11 துணை சுகாதார நிலையங்கள், வாலாஜாவில் கல்வி அலுவலகம், அம்மூர் பகுதியில் 2 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 14 சுகாதார மையங்களுக்கான சுற்றுச்சுவர்களை அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர், ஏழை குழந்தைகள், பொதுமக்கள் நலனுக்காக சன் டி.வி. மேற்கொண்டுள்ள பணிகளை பாராட்டினார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நல திட்டங்களை செயல்படுத்துவதற்காக சன் டி.வி.யும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.