
திருத்தணி: குப்பம்கண்டிகை ஊராட்சியில், கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் சும்மாவே பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு, கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் குப்பம்கண்டிகை ஊராட்சியில் 4 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஊரக வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பின்னர், ஊராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாட்டின்றி பூட்டிக்கிடக்கிறது. இந்த சுகாதார வளாகம் தற்போது, பாழடைந்து கிடப்பதால் குடிகாரர்களின் கூடாரமாக விளங்கிவருகிறது.
இந்நிலையில், சுகாதார வளாகம் இல்லாததால் அப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் நிலை தொடர்கிறது. கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சுகாதார வளாகங்களை கட்டிக்கொடுக்கும் நிலையில், பல ஊராட்சிகளில் இதுபோன்று சுகாதார வளாகங்கள் பயன்பாடின்றி உள்ளத, வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் எதிர்பார்த்து கோரிக்கை வைத்துள்ளனர்.