*திருச்செந்தூரில் வேலைக்கு சென்ற முதல் நாளில் பரிதாபம்
நெல்லை : திருச்செந்தூரில் பாதாள சாக்கடை தொட்டியில் தவறி விழுந்த நெல்லையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தூய்மைப் பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த ஆலடிப்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சுடலைமணி (40). மாற்றுத்திறனாளியான இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.
திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட சுடலைமணி, முதல் நாளான நேற்று வேலைக்கு வந்தபோது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் பொங்கி வெளியேறியது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து கழிவுநீர் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சக தூய்மைப் பணியாளர்களுடன் அங்கு சென்ற போது பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதை சரி செய்வதற்கான பணிக்காக தொட்டியில் சுடலைமணி இறங்கினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தொட்டியில் தவறி விழுந்து கழிவுநீரில் மூழ்கினார். இதைப் பார்த்து பதறிய சக ஊழியர்கள், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கழிவுநீரில் மூழ்கிய சுடலைமணியை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுடலைமணி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். திருச்செந்தூரில் தூய்மை பணியாளராக வேலைக்கு வந்த முதல் நாளே கழிவு நீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.