Monday, June 5, 2023
Home » சனிக்கு என்ன பரிகாரம்?

சனிக்கு என்ன பரிகாரம்?

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சனி பகவான் என்று ஏன் பெயர் வந்தது. ‘சனைச்சர’ (மெதுவே நகர்வது) என்னும் சமஸ்கிருதப் பெயர் வைக்கப்பட்டு, தமிழில் சனீஸ்வரன் என்றாகி விட்டது. இருப்பதிலேயே இரண்டரை வருடம் ஒரு ராசியைக் கடக்க சனி எடுத்துக்கொள்கிறார்.

சனிப்பெயர்ச்சி என்றவுடன் பலரும் அச்சப் படுகின்றனர். இந்த அச்சம் தேவையற்றது. காரணம், சனி மட்டுமே ஒரு ஜாதகரின் முழுமையான பலன்களைத் தீர்மானிப்பது இல்லை. அது மட்டும் இல்லாமல் சனி தரும் பலன்கள் ஒரே நட்சத்திரம் ராசிக்கு பல்வேறு காரணங்களால் வேறுபடும். ஜாதகரின் வயது பொருத்தும் வேறுபடும். ஏழரைச் சனி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு அது பலமான பாதிப்பைத் தருகிறது. சிலருக்கு அது மிகச் சாதாரணமான பாதிப்பையே தருகிறது.

எனவே நீங்கள் சில எதிர்மறைப் பலன்களை கண்டு பயப்படத் தேவையில்லை. அதற்கு ஏற்றவாறு உங்கள் எச்சரிக்கை உணர்வையும் முன்னேற்பாடுகளையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். பிரார்த்தனையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். எதையும் கவனமாகச் செய்யுங்கள். இதுதான் சனிப்பெயர்ச்சி நமக்கு தருகின்ற செய்தி. பொதுவாக சனிப் பெயர்ச்சி அதிக அளவு பாதிக்காமல் இருப்பதற்காக சில எளிமையான பரிகாரங்களை நம்முடைய பெரியவர்கள் பரிந்துரைத்து இருக்கிறார்கள். அந்த பரிகாரங்களை நாம் பார்ப்போம்.

  • அன்னதானம். எள் பொடி அன்னதானம் வழங்குங்கள். ஒருவர் பசி ஆறும் போது எரியும் வயிறு குளிரும். சனியின் கொதிப்பு பலன்கள் குளிரும்.
  • சனிக்கிழமை கை கால் ஊனம் கொண்டோர்களுக்கு உதவி செய்யுங்கள். வசதி இருப்போர் கால் ஊனம் கொண்டோர்க்கு ஊன்று கோல், உந்து வண்டி வாங்கித் தாருங்கள்.
  • காக்கைக்கு உணவு படையுங்கள். பிதுர் ஆசிகளை பெற்றுத் தரும்.
  • கருப்பு கலந்த வஸ்திர தானம் குறிப்பாக பாடல் பெற்ற தலங்களில் செய்யுங்கள். இதனால் உள்ளம் திடம் கொள்ளும். காரணம், சனி பகவான் சில நேரங்களில் அவமானமான கஷ்டங்களை ஏற்படுத்துவார். ஒருவருக்கு வஸ்திரம் தருவது அவருடைய மானத்தைக் காப்பது போல. அதன் மூலமாக இந்த அவமானங்களில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளும் வழி கிடைக்கும்.
  • சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சிவன் கோயில் சென்று, சிவனையும் அம்பாளையும் வணங்கி விட்டு, நிறைவாக நவக்கிரக சந்நதியில் நல்லெண்ணெய் தீபம் போட்டு, ஒன்பது முறை வலம் வந்து வணங்குவதன் மூலம் சனி பகவானின் அருளை பெறலாம்.
  • விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் சனி பகவானின் அருளைப் பெறலாம். வன்னி மர பூஜையும் மிகச் சிறப்பான பலனைத் தரும். இயன்ற பொழுதெல்லாம் சனியின் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்யுங்கள்.

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனி ப்ரசோதயாத்
சனி அருள்தரும் தலங்கள்

சனிப் பெயர்ச்சியின் போதும், சனி தீமையான பலன்களைத் தரும் நிலை (தசாபுக்திகள்), நட்சத்திரங்களில் பிரவேசிக்கும் பொழுதும் மிகச்சிறந்த பரிகாரமாக நாம் செய்ய வேண்டியது தெய்வத்திடம் அடைக்கலம் புகுவது. தெய்வத்தை வணங்குவது. இதற்காகத்தான் திருக்கோயில்கள் கட்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. இவைகளெல்லாம் மகான்கள் கட்டிய கோயில்கள். மனிதர்களுக்குத் துன்பம் வரும் பொழுது இங்கே வந்து ஆறுதல் பெறட்டும் என்பதற்காகப் பல்வேறு கோயில்களை அவர்கள் கட்டி வைத்துச் சென்று இருக்கிறார்கள். அதிலே சனி பகவானின் அருளை பெறுவதற்கும், அவர் தரும் தீய பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கும், சில கோயில்களை அவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள்.

அந்தக் கோயில்கள் பல்வேறு காரணங்களுக்காக கட்டப்பட்டு இருந்தாலும் சனியினுடைய தீய பலன்களில் இருந்து தப்பிப்பதற்கும், நல்ல பலன்களை விருத்தி செய்து கொள்வதற்கும் நாம் சென்று தரிசிக்கலாம். ஆனால் ஒரு விஷயம். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே இருக்கக் கூடிய பிரதான தேவதையை தரிசித்துவிட்டு சனி பகவானிடம் வர வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். சனியின் அருளை பெறுவதற்கான சில பரிகார கோயில்களை நாம் கீழே பார்க்கலாம். பொதுவாக சனீஸ்வரர் என்றாலே நமக்கு திருநள்ளார் தான் ஞாபகம் வரும். அந்த தலத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால், அதை விடுத்து மற்ற சில தலங்களை பற்றிய குறிப்புகளை வாசகர்களுக்காக கொடுத்திருக்கிறோம். இன்னும் நிறைய கோயில்கள் இருக்கின்றன. இப்பொழுது சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

சிங்கனாப்பூர்: அவுரங்காபாத்- அகமத் நகர் நெடுஞ்சாலையில் கோடே கான் எனும் இடத்தில் பிரியும் சாலை வழியாகச் சென்றால், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். மகான் சாயிபாபா கோயில் கொண்டிருக்கும் ஷீர்டியிலிருந்து சுமார் 74 கி.மீ. தொலைவு. ஷீர்டிக்குச் செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் சிங்கனாப்பூர் சனி பகவானையும் தரிசித்து வருவது வழக்கம். இங்கே இவரைப் பக்தர்கள் சனி மகராஜ் என்றே அழைக்கிறார்கள்.

காரையூர்: திருவாரூரிலிருந்து நாகூர் செல்கிற வழித்தடத்தில் இந்த ஆலயம் உள்ளது. பொங்கு சனீஸ்வரன் தலம் என்று போற்றப்படும் திருக்கொள்ளிக் காட்டிலிருந்து காரையூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீசங்கர நாராயணர் சிவாலயமே அது. சனி பகவான் ஓர் இரவுக்காலம் இங்கே தங்கியதால் இத்தலம் சனி ஈஸ்வர வாசல் என்ற பெயர் பெற்றுவிட்டது. சிவாலயத்தின் முகப்பில் பக்தர்களுக்கு அருள்தரும் சனிபகவான் இங்கு மட்டுமே காட்சிதருகிறார்.

இலத்தூர்: சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் இலத்தூர் சிவன் கோயில் திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. அருள்மிகு மதுநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்று பொங்கு சனீஸ்வரராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபடலாமே.

குச்சனூர்: எல்லோருக்கும் தெரிந்த பிரசித்தி பெற்ற தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில். யந்திர சனீஸ்வரர்: திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு யந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது.

திருக்கொடியலூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர். இந்த ஊரில் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது யமதர்மனும் சனீஸ்வர பகவானும் அவதரித்த தலம். திருநள்ளாறில் இருந்து சனீஸ்வர பகவான் உடைய பார்வை இங்கு படுவதாக ஐதீகம்.

திருவாதவூர்; மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறை நாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

எட்டியத்தளி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வழிபட்ட தலம். சனி பரிகார தலம்.

மொரட்டாண்டி: விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் ஒரு கரத்தில் வில், மறு கரத்தில் அம்பு, மற்ற இரு கரங்கள் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள்கிறார்.

அருங்குளம்: திருவள்ளூர்-திருத்தணி வழித்தடத்தில் திருவள்ளூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அருங்குளம். இங்கு அருளும் அகத்தீசர், சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டவர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi