சான் டீயகோ: அமெரிக்காவின் சான் டீயகோ நகரில் சிம்பயோடிகா மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. யுஎஸ் ஓபன் பெரும்வெற்றித் தொடர் முடிந்த மறுநாளே இந்த போட்டி தொடங்கியது. எனவே இதில் முன்னணி வீராங்கனைகள் சிலர் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் யுஎஸ் ஓபனில் காலிறுதியுடன் வெளியேறிய நட்சத்திரங்கள் தரவரிசைக்கான புள்ளிகளை பெற இந்த தொடரில் களம் கண்டுள்ளனர். சான் டீயகோவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ்(30வயது, 36வது ரேங்க்), பிரான்ஸ் வீராங்கனை காரோலின் கார்சியா(29வயது, 10வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் கார்சியா 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் பேராடி வென்றார். ஒரு மணி 44நிமிடங்கள் நீண்ட இந்த ஆட்டத்தின் மூலம் கார்சியா காலிறுதிக்கு தகுதிப் பெற்றார்
மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை பார்பரோ கிரெஜ்சிகோவா(27வயது, 13வது ரேங்க்), லாத்வியா வீராங்கனை அன்ஹெலினா கலினினா(26வயது, 28வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். ஒரு மணி 40நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் கிரெஜ்சிகோவா 6-3, 6-2 என நேர் செட்களில் வென்று காலிறுதியில் நுழைந்தார். இவர்களைப் போன்று டேனியலி கொலின்ஸ், ஷோபியா கெனின், எம்மா நவர்ரோ(அமெரிக்கா), ஹதாதத் மாயா(பிரேசில்), மரியா சாக்கரி(கிரீஸ்), அனடசியா பொடபோவா(ரஷ்யா) ஆகியோரும் காலிறுதியில் விளையாட உள்ளனர்.