தாம்பரம்: சானடோரியத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும், பெண் ஊழியர்களுக்கான தங்கும் விடுதியை, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில், பெண் ஊழியர்களுக்கான தங்கும் விடுதி ரூ.22 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் 466 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து, விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, இந்த தங்கும் விடுதியை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது புதியதாக கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதி அறைகள், நவீன சமையலறை, யோகா உள்ளிட்ட பல பயன்பாடு அரங்கு, இணையதளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அதே வளாகத்தில் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சியாக கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில், அதற்கான வகுப்புகளை ஆய்வு செய்து, மாணவிகளிடம் தேவையான வசதிகள் குறித்தும், பயிற்சி மையத்தில் உள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி, கிழக்கு தாம்பரம் 48வது வார்டுக்கு உட்பட்ட காளிதாசர் தெரு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியில் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற தார்சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். ஆய்வின்போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், சமூக நலத்துறை அலுவலர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.