சென்னை: சனாதன விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் இந்து மதத்திற்கு எதிராக பேசி வரக்கூடிய திமுக எம்.பி.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் திருத்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதேநேரம் உதயநிதி தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் மனுதாரர் நிகழ்ச்சியுடைய முழு ஆதாரங்களை தாக்கல் செய்ய தவறியதால் இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல; அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஆதாரங்களை கேட்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. தங்கள் மீது குற்றம்சாட்டிய மனுதாரர்கள் தான் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால் இந்து முன்னணியின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து இந்த விவகாரத்தை வைத்து பாஜகவினர் ட்விட்டரில் தனி விசாரணையை நடத்துகின்றனர் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கோவாரண்டோ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே இந்த வழக்கில் பதில் அளிப்பதற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி.ராசா தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.