திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று திருவாரூரில் அளித்த பேட்டி: 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 9 ஆண்டு ஆட்சியில் எந்தவித சாதனைகளையும் கூறி வாக்கு கேட்க வாய்ப்பு இல்லாததால் மக்களை திசை திருப்ப தற்போது சனாதன பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை. பிரச்னைகளை அமைதிப்படுத்த வேண்டிய பிரதமரோ, சனாதனம் எதிர்ப்பு குறித்து யார் பேசினாலும் பதிலடி கொடுங்கள் என்கிறார். இது நாட்டில் கலகம் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும். அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என வடமாநில சாமியார் தெரிவித்த கருத்து சரியானது தான் என மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளது மிக மோசமானது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் சாத்தியம் இல்லை. மக்களை திசை திருப்பவே இந்த பிரச்னையை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.