சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு ஏற்பட்டது. தென்கொரியா நாட்டை சேர்ந்த சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இங்கு ஏசி, டிவி, வாஷிங் மெஷின்கள், குளிர்சாதன பெட்டி, கம்பிரசர்கள் உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பான வேலைநிறுத்த அறிவிப்பை தொழிலாளர்கள் அறிவித்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்துடன் ஒரு பிரிவு தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை அளிக்க கோரினர். நிர்வாகம், கோரிக்கைகளை பரிசீலனை செய்து 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு மற்றும் இதர பலன்கள் ெதாழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்க முன்வந்தது. இப்பலன்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் தொழிலாளர் ஆணையர், சாம்சங் நிர்வாகம், தொழிற்சங்கம் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தால் எழுப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக எனது முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தினர் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. இருதரப்பும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, சாம்சங் தொழிலாளர்களுக்கு 2025-2026ம் ஆண்டில் ரூ.9 ஆயிரம் சம்பள உயர்வும், 2026-2027 மற்றும் 2027-2028 ஆண்டுகளுக்கு தலா ரூ.4,500 வீதம் மூன்று ஆண்டு காலத்திற்கு ரூ.18,000 நேரடி சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.
அனுபவத்தின் அடிப்படையிலான சிறப்பு ஊதிய உயர்வு 3 ஆண்டு காலங்களில் ரூ.1000 முதல் ரூ.4000 வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும். ஒருமுறை சிறப்பு பதவி உயர்வாக 31.3.2025 தேதியில் 6 வருடங்கள் முறையான பணி நிறைவு செய்து பதவி உயர்வு கிடைக்காத தொழிலாளர்களுக்கு (ஆப்ரேட்டர் 1, 2, 3, டெக்னிசியன் 1, 2, 3) சிறப்பு உயர்வு அளிக்கப்படும். கூடுதல் விடுப்பு சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பணி விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்க்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். ேபச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் சாம்சங் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.