காஞ்சிபுரம்: 2025-26ம் ஆண்டில் ஒரு தொழிலாளருக்கு ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேஷன் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் தொழிற்சங்க அங்கீகாரம், சுயமரியாதை, வேலை நேரம் குறைப்பு, திருத்தப்பட்ட ஊதியம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சாம்சங் விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொடங்கியது. அந்த பேச்சுவார்த்தையில் சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் தரப்பில் சிஐடியு சௌந்தரராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட 25 தொழிலாளர்களை சாங்சங் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாம்சங் தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; அடுத்த 2 ஆண்டுகள் முறையே ரூ.4,000, ரூ.4,500 ஊதிய உயர்வு வழங்கவும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. ஒரு தொழிலாளருக்கு ரூ.21,000 முதல் ரூ.23,000 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது என அவர் தெரிவித்தார்.
மேலும், தொழிலாளர்கள் தரப்பில் சிஐடியு சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; சாம்சங் தொழிலாளர் சங்கம் ஆரம்பித்ததே நிர்வாகத்துக்கு பிடிக்கவில்லை. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் நடவடிக்கையை தொழிலாளர் நலத்துறை எடுக்கும். பிரச்சனை குறித்து சாம்சங் தொழிலாளர் சங்கத்துடன் பேசி முடிவு எடுக்க வேண்டும். 2025-26ம் ஆண்டில் ஒரு தொழிலாளருக்கு ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.