நாகர்கோவில்: சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய குமரி கடல் பகுதியில் நீர், பிளாஸ்டிக், மண் மற்றும் மீன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கி சென்ற சரக்கு கப்பல் 38 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. இதில் இருந்த 643 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு, சல்பர் எரிபொருள் எண்ணெய் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருந்தன. இவை கடலில் கலந்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்த பிளாஸ்டிக் துகள்கள் கேரளாவின் கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன. இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களின் உடலில் தங்கி, உணவுச் சங்கிலியை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த நூற்றுக்கணக்கான டன் பர்னஸ் ஆயில் கடலில் கலந்து, கொச்சி கடல் பரப்பில் எண்ணெய் படலத்தை உருவாக்கியுள்ளது. இதனால், கரையில் இருந்து 37 கி.மீ. தொலைவுக்குள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாசு கடற்புற்கள், மீன்கள் மற்றும் கடற்பசு போன்ற பாலூட்டி வகை உயிரினங்களின் வாழ்விடங்களை அழிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், கப்பல் கவிழ்ந்த விபத்து காரணமாக குமரி மாவட்ட கடல் பகுதியில் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல்வள ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் நீர் மாதிரிகள், பிளாஸ்டிக் துகள்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதனை போன்று திருநெல்வேலி மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகமும் இதே ஆய்வை மேற்கொள்கிறது. தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் உதவி பேராசிரியர் துரைராஜா தலைமையிலான ஆய்வு குழுவினர் குமரி மாவட்டத்தில் கடல் நீர் மற்றும் மண் மாதிரிகள், மீன் மாதிரிகள் சேகரித்து அது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.