சுரண்டை: சுரண்டை அருகே இரு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடக்கும் கருங்குளம் கால்வாய் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படுமா? என பாசன விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தென்காசி மாவட்டம், சுரண்டை அடுத்த சாம்பவர்வடகரை அருகே கருங்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றி சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கருங்குளத்திற்கு தண்ணீர் வந்தால் சாம்பவர் வடகரை, பொய்கை, மேலப் பொய்கை, சின்னத்தம்பி நாடானூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர். அத்துடன் கருப்பாநதி அணையில் இருந்து பாப்பான் கால்வாய் எட்டாம் மடையில் திறக்கப்படும் தண்ணீர் புதுக்குடி குளம், குறிஞ்சி பத்து குளம், ஆர்விஎஸ் குளம், வேலாயுதபுரம் குளம், பொய்கை குளம், தொண்டமான் குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து கருங்குளத்திற்கு தண்ணீர் வரும்.
கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்ததால் 8வது மடையில் தண்ணீர் திறக்காததால் கருங்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. இதனால் கருங்குளம் பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்தையும் நஷ்டத்தையும் சந்தித்து வந்தனர். வானம் பார்த்த பூமியாக அந்த பகுதி மாறியது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு அக்.11ம் தேதி இதுகுறித்த கோரிக்கை செய்தி தினகரனில் படத்துடன் வெளியானது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு, ஊர்மேலழகியான் குளத்தில் இருந்து கருங்குளம் வரை சுமார் 1.75 கி.மீ. தொலைவுக்கு புதிதாக கால்வாய் அமைக்க மொத்தம் ரூ.1.84 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து அடிக்கல் நாட்டப்பட்டு திட்டப்பணி கருங்குளத்தில் இருந்து துவங்கி வேலாயுதபுரம் வரை சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
இந்நிலையில் வேலாயுதபுரத்தில் இருந்து ஊர்மேலழகியான் குளம் வரை சுமார் 700 மீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைக்க நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பட்டாதாரர்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எஞ்சிய பணிகள் அனைத்தும் கடந்த 2022ம் ஆண்டு கிடப்பில் போடப்பட்டன. இதனால் இதுவரை சுமார் ரூ. 1 கோடி வரை அரசு பணம் செலவு செய்யப்பட்டுள்ள போதும் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. எனவே, 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்துவதோடு சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலங்களை கையகப்படுத்துவதோடு கருங்குளம் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க முன்வருமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
மழைக்கு முன் நிரந்தரத்தீர்வு: இதுகுறித்து சாம்பவர்வடகரை பேரூர் திமுக செயலாளரும், விவசாயியுமான முத்து கூறுகையில் ‘‘கருங்குளம் கால்வாய் அமைக்க அரசு சுமார் 1.84 கோடி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து கால்வாய் அமைக்கும் பணி அவசரகதியில் துவங்கியது. ஆனால், 60% பணிகள் முடிந்தநிலையில் எஞ்சிய கால்வாய் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. விவசாயிகள் மற்றும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவின் அழுத்தம் காரணமாக தேர்தலுக்காக அவசர கதியில் நிலங்களை கையகப்படுத்தாமல் கால்வாய் பணியை துவங்கியது. நிலம் கையகப்படுத்தாததால் தற்போது கால்வாய் பணி கிடப்பில் கிடக்கிறது. கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளித்து உள்ளோம். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும். எனவே, மழை காலத்திற்கு முன்பாக நிலங்களை கையகப்படுத்தி எஞ்சியுள்ள 40% பணிகளையும் முடித்துக் கொடுத்தால் சாம்பவர்வடகரை மற்றும் கருங்குளத்தை சுற்றியுள்ள விவசாய குடும்பங்கள் பயன்பெறும். அத்துடன் இந்த பிரச்னைக்கும் நிரந்தரத்தீர்வு கிடைக்கும்’’ என்றார்.