ராஞ்சி: ஜார்கண்ட்டில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜவில் இணைவது தொடர்பாக இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று பாஜ தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சம்பாய் சோரன் கட்சியில் இருந்து விலக உள்ளதாகவும், பாஜவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றது. டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் பாஜ தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் பாஜ தலைவர் பாபுலால் மராந்தி கூறுகையில், சம்பாய் சோரன் பாஜவில் இணைவது தொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அவர் ஒரு அனுபவம்மிக்க அரசியல்வாதி மற்றும் ஜார்கண்ட் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். அவர் தனது பாதையை தீர்மானிப்பார். சம்பாய் போன்ற மூத்த தலைவர்கள் வெளியேறினால் அது கட்சியை பாதிக்கும் என்றார்.