சென்னை: சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என அன்புமணி, டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளனர்.
* அன்புமணி (பாமக தலைவர்): தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு இப்போதுதான் தீவிரமடைந்துள்ளது. எனவே, காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15ம் தேதி (இன்று)யுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், குறுவை சாகுபடியை காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களால் வெற்றிகரமாக செய்ய முடியவில்லை. அதேநிலை சம்பா சாகுபடிக்கும் ஏற்பட்டால், காப்பீடு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் உழவர்கள் சாகுபடியில் இறங்கியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், கடந்த ஆண்டைப் போலவே, நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்.
* டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): காவிரி டெல்டாவில் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான விவசாயிகள் மட்டுமே தற்போது வரை பயிர் காப்பீடு செய்துள்ளனர்.எனவே, தமிழ்நாட்டின் உணவு தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் காவிரி பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெல் பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.