சமயபுரம்: பக்தர்களின் வசதிக்காக சமயபுரம் கோயிலுக்கு வருகைதரும் வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலுக்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் விழா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும், வகையில் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் சாலையில் நிற்காதபடி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வாகனங்களை கோயில் வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக கோயிலின் முடிகாணிக்கை மண்டபத்தின் அருகாமையில் சிறிய வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த இடம் மழை காலங்களில் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் தற்போது ஆயிரக்கணக்கான நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த அந்த இடத்தை விரிவாக்கம் செய்து “பேவர் பிளாக்’’ கல் பதிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவடைந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.